யாழ்.இணுவில் பகுதியில் தங்கியிருந்து இந்திய புடவை வியாபாரி கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கும் நிலையில், இணுவில், ஏழாலை பகுதிகளில் சில வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார்.
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியா சென்றவருக்கு கொரோனா தொற்றுள்ளதாக வெளியான தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. என யாழ்.இந்திய துணைத்துாதுவர் எஸ்.பாலச்சந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தொிவித்திருக்கின்றார்.
யாழ்.இணுவில் பகுதியில் தங்கியிருந்த இந்திய புடவை வியாபாரி ஒருவர் மீண்டும் இந்தியா திரும்பிய நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானதாக தகவல் வெளியானது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணுவில் மற்றும் ஏழாலை பகுதிகளில் சில வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக இணுவில் – அங்கலப்பாய் பகுதியில் குறித்த புடவை வியாபாரி தங்கியிருந்த வீடு மற்றும் அந்த வீட்டை வாடகைக்கு வழங்கியவரின் வீடு ஆகியன நேற்று முடக்கப்பட்டு அங்கிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக மாகாண சுகாதார பணிப்பாளர் கூறினார்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்.இந்திய துணைத்துாதுவர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், குறித்த விடயம் தொடர்பான தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலும் அவர் யாழ்ப்பாணத்திலிருந்து செல்லும்போது அவருக்கு எந்தவொரு அறிகுறிகளும் இல்லை. காரணம் இங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் கொழும்பு துறைமுகத்திற்குள் நுழையும்போதும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. கப்பலிலும் பரிசோதனை முற்கொள்ளப்பட்டது. இது எவற்றிலும் அறிகுறிகள் இல்லாத நிலையிலேயே தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். சில அறிகுறிகளுடன் காணப்பட்டவர்கள் பயணத்தை தொடர அனுமதிக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.