தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் இலட்சியப்பயணத்தில் நாம் உரிமையுடன் உண்மையாய் தொடர்ந்தும் பக்கபலமாக செயற்படுவோம் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நடைபெற்று நிறைவடைந்த பொதுத் தேர்தலில் எமக்கு ஆதரவளித்த, வாக்களித்த அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நடைபெற்று நிறைவடைந்த 9ஆவது பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களுக்கான கொள்கைப்பற்றுமிக்க அரசியல் தெரிவாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியாக நாம் போட்டியிட்டிருந்தோம். கூட்டணி ஆரம்பிக்கப்பட்ட நான்கு மாதங்களில் நாம் வடக்கு கிழக்கின் அனைத்துப் பகுதிகளிலும் எமது கொள்கைகளை எடுத்துரைத்து மீன் சின்னத்தில் போட்டியிட்டிருந்தோம்.
மிகக் குறுகிய காலத்தில் வடக்கு கிழக்கில் உள்ள எமது உறவுகள் ஐம்பத்தோராயிரம் (51000) வாக்குகளை எமக்கு அளித்ததோடு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஒன்றையும் எமக்கு வழங்கியுள்ளனர். அதற்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதோடு எம்மீதான நம்பிக்கையை தொடர்ந்தும் பாதுகாத்து மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
இம்முறை பேரினவாத சக்திகள், தமிழ் தேசியத்தின் மீது உண்மையான கொள்கைப் பற்றுள்ளவர்களை தோற்கடிப்பதற்காக பல்வேறு கைங்கரியங்களை மேற்கொண்டிருந்தன. அதிலொன்றாகத்தான் பல்வேறு அரசியல் கட்சிகளும், சுயேட்சைகளும் களமிறக்கப்பட்டு பாதிக்கப்பட்ட எமது மக்களை குழப்பியடிக்கப்பட்டது.
தேசியக் கட்சிகளும், அவற்றின் பங்காளிக் கட்சிகளும் பலகோடி ரூபாய்களை அள்ளி இறைத்து, இளைஞர்களில் ஒரு பகுதியினரையும், வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள நலிவடைந்த மக்களையும் விலைக்கு வாங்கி தமிழ்த் தேசியத்தை அழிக்கும் வேலைத்திட்டத்தினை மிகக் கச்சிதமாக முன்னெடுத்தனர்.
தற்போது அவர்களின் நிகழ்ச்சித்திட்டம்; பலித்துள்ளது என்றே கூறவேண்டியுள்ளது.
அதாவது, உண்மையான மக்கள் சார்பு செயற்பாட்டாளர்கள் புறமொதுக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தேர்தல் நாடகத்தினை அரங்கேற்றி வெற்றிபெற்றுள்ளது.
ஆனால் இத்தகைய போலியான விம்பங்கள் நிச்சயமாக நீடிக்கப்பபோவதில்லை. அத்துடன் மக்கள் அவர்களை விரைவில் அடையாளம் கண்டுவிடுவார்கள். எம்மைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களைப் போன்று மக்களுக்காக மக்களின் தளத்தில் நின்றே அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்போம்.
அந்த வகையில் பிரதிநிதித்துவம் என்பது மக்கள் செயற்பாட்டிற்கான மற்றதொரு வலுவாக்கும் அதிகாரமளிப்பு என்றே கருதுகின்றோம். ஆகவே பிரதிநிதித்துவ அரசியலைத் தாண்டி, வன்னி மண்ணை கூறுபோட்டு எமது மக்களின் உரிமைகளை, நீதியை, இருப்பை குழிதோண்டிப் புதைப்பதற்கு பருந்துகளாக பல தரப்புக்கள் சுற்றிவருகின்றன.
அவற்றிடமிருந்து எமது மக்களை காப்பாற்றுவதற்காக நாம் தொடர்ந்தும் பொறுப்புள்ளவர்களாக நடந்துகொள்வோம். அதேபோன்று எமது அரசியல் இயக்கமும் தொடர்ச்சியாக பங்களிப்புக்களை நல்கும்.
நாம் போலித்தேசிய போர்வைகளின்றி உண்மையாக மக்களின் உரிமைகளுக்காக அவர்களின் மீது எமக்குள்ள உரிமையின் பால் நின்று தொடர்ந்தும் செயற்படுவோம். அவர்களின் குரலாகவே எப்போதும் இருப்போம் என்றுள்ளது.