சட்டக்கல்லூரி நுழைவுப்பரீட்சை மற்றும் முகாமைத்துவ சேவை அதிகாரிக்கான திறந்த போட்டிப்பரீட்சைக்கான பாடநெறிகள் உத்தியோகபூர்வமாக கல்முனையில் அங்குரார்ப்பணம்.
கல்முனை பிராந்திய மாணவர்களை ஊக்குவித்து, வழிகாட்டி சட்டக்கல்லூரிக்கான அனுமதியினை சாத்தியப்படுத்திக்கொள்ளவும் மற்றும் முகாமைத்துவ சேவை அதிகாரி பதவி வெற்றிடத்திற்கான ஆட்சேர்ப்பு பரீட்சைக்கு வழிகாட்டவும் கல்முனையன்ஸ் போரமினால் விஷேட திட்டமொன்று வகுக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
கல்முனையன்ஸ் போரமின் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவினால் முன்னெடுக்கப்படும் மேற்படி செயற்றிட்டத்தின் கீழ் பதிவுசெய்த மாணவர்களுக்கான மூன்று மாத கால விஷேட பாடநெறியினை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (16) கல்முனை கமு/ அஸ் ஸுஹறா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
முன்கூட்டி பதிவுசெய்ததன் அடிப்படையில் பொத்துவில் தொடக்கம் மருதமுனை வரையான பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் நாற்பது மாணவர்கள் மேற்படி பாட நெறியில் இணைத்துக்கொள்ளப்பட்டு அனுபவமிக்க வளவாளர்களைக்கொண்டு முற்றிலும் இலவசமாக பயிற்சி வழங்கப்படவுள்ளது.
போரத்தின் செயற்பாட்டாளர் முபாரிஸ் எம். ஹனீபா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக பொத்துவில் பிரதேச முன்னாள் செயலாளர் எம்.எஸ். முஹம்மட் தெளபீக் (SLAS) மற்றும் சட்டத்தரணியும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பகுதிநேர விரிவுரையாளருமான ஹஸ்ஸான் றுஸ்தி (LLB) அவர்களும், வளவாளர்களான கல்வி அமைச்சின் விஷேட அத்தியட்சகர் அபான் காரியப்பர் (SLAS), சட்டத்தரணி முஹம்மட் பிர்னாஸ் (LLB), எம். முஹம்மட் சப்ரி (SLPS) ஆகியோர்கள் கலந்துகொண்டு குறித்த தொழில் துறைகள் பற்றியும், பாடநெறிகள் மற்றும் பரீட்சைகள் பற்றியும் விரிவாக கலந்துரையாடினர்.
நிகழ்வில் இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களுக்கான விண்ணப்பங்களும் வழங்கப்பட்டதோடு மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்துக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்டது.
-வணக்கம் லண்டனுக்காக நூருல் ஹுதா உமர்-