“இலங்கையில் கொரோனாவின் மூன்றாம் அலையின் வீரியம் அதிகமாகும். எனவே, நாட்டு மக்கள் அவதானமாகச் செயற்படாவிடின் கொரோனாவின் சமூகப் பரவல் அதிகரிக்கும்.”
இவ்வாறு தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிகை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் சமூகப் பரவலாக மாற்றம் பெற்றுள்ளது எனத் தொடர்ச்சியாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் நாட்டின் நிலைமை குறித்து தெளிவுபடுத்துகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“நாட்டில் அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இது அனைத்துமே பரந்த கொத்தணியாக கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை மினுவாங்கொடை கொத்தணியே பெரிய கொத்தணியாக அடையாளம் காணப்பட்டடிருந்தது. அதன் அடுத்த உப கொத்தணியாக பேலியகொட கொத்தணி உருவானது.
இங்கு இப்போது பரவல் அதிவேகத்தில் உள்ளது. எனினும், இரு கொத்தணிகளும் ஒரே தொடர்பைப் கொண்டவையாகும்.
இந்தநிலையில் பி.சி.ஆர். பரிசோதனைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றோம்.
கொத்தணியாக கொரோனா வைரஸ் பரவல் அடையாளம் காணப்பட்டாலும் இது சமூகப் பரவலாகும் நிலைமை உள்ளது.
அதற்கு மக்களின் செயற்பாடுகள் காரணமாகும். சமூகத்தில் மக்களின் செயற்பாடுகள் முழுமையாக சுகாதார வழிகாட்டகளைப் பின்பற்றும் விதமாக அமைய வேண்டும். கூட்டம் கூடுவது, பொது நிகழ்வுகளை கூட்டுவது என அனைத்துமே தவிர்க்கப்பட வேண்டும்.
மக்கள் அவதானமாக இல்லாதுபோனால் கொரோனாவின் சமூகப் பரவல் அதிகரிக்கும். அதேபோல் மூன்றாம் அலையின் வீரியம் அதிகமாகும்.
இந்த வைரஸ் செயற்படும் விதம் மாறுபட்டதாகும். விரைந்து பரவும் தன்மை கொண்டுள்ளது.
எனவேதான் அதிகளவில் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
இன்று நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் உள்ளனர். இவர்கள் மூலமாக கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறும் அச்சுறுத்தல் உள்ளது.
எனினும், நிலைமைகளைக் கட்டுப்படுத்தும் நிலையில் நாம் உள்ளோம். எனவே, மக்கள் பொது நிகழ்வுகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
அவசியமான நிகழ்வுகள் என்றால் குறைந்த நபர்களுடன் நிகழ்வுகளை நடத்த முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் அதிக கூட்டமான,
சன நெரிசலான இடங்கள் என்றால் கொரோனா வைரஸ் மீண்டும் பரவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது”