இலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில் ஒரு நினைவுச் சின்னத்தை கட்டுவதாக கனடாவின் பிரம்ப்டன் மேயர் பெட்ரிக் பிரவுண் உறுதியளித்துள்ளார்.
இவ்வாறு, நினைவுச் சின்னத்தைக் கட்டுவதற்கு கடந்த 21ஆம் திகதி புதன்கிழமை, பிரம்ப்டன் நகர சபை ஏகமனதாக வாக்களித்தாக பிரம்டன் மேயர் பெட்ரிக் பிரவுண் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டது.
இது, போரில் இறந்த தமிழ் மக்களை நினைவுகூருவதற்காக 2019ஆம் ஆண்டில் கட்டப்பட்ட நிலையில், இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து உலக அளவில் தமிழ் மக்கள் பரந்து வாழும் தேசங்களில் மக்களின் சீற்றத்திற்கு வழிவகுத்தது.
இதுகுறித்து, தனது ருவிற்றர் பதிவில் தெரிவித்துள்ள பெட்ரிக் பிரவுண், “பிரம்ப்டன் நகர சபை ஒருமனதாக முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை அமைக்க வாக்களித்தது.
இலங்கையின் ஆட்சியாளர்கள், தங்களது சொந்த இரத்தக் கறை படிந்த வரலாற்றை வெள்ளையடிக்க முயற்சிக்கும் அதேவேளையில், கனடாவிலும் இதற்கு நேர்மாறாக நாங்கள் செய்வோம்.
தமிழ் இனப்படுகொலையை நாம் மறக்க மாட்டோம். பாதிக்கப்பட்டவர்களை நாங்கள் நினைவில் கொள்கிறோம். தமிழ் இனப் படுகொலையின் போது 75ஆயிரம் தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. மதிப்பிடுகிறது.
முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தின் அழிவு இலங்கை அரசாங்கம் ஒரு கலாசார இனப்படுகொலையைத் தொடரவும், பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்று பாசாங்கு செய்து வரலாற்றை மீண்டும் எழுதவும் முயன்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.