கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை உள்ளூரில் தயாரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் அதற்கான தடுப்பூசி தொழிற்சாலையை கண்டி பல்லேகலையில் ஆரம்பிப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசிக்கான தட்டுப்பாடு நிலவும் நிலையில் உள்நாட்டிலேயே சினோவெக் தடுப்பூசியை தயாரிப்பதற்கு தீர்மானிக்கப் பட்டுள்ளது. உள்நாட்டில் தடுப்பூசியை தயாரிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பித்தபோது அந்த பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அதனையடுத்தே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சீனாவின் சினோவெக் பயோடெக் நிறுவனம், கெளும் லைன் சயன்ஸஸ் நிறுவனம் மற்றும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் ஆகியன இணைந்து தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கு தீர்மானித்துள்ளன.