மீனவர்களுக்காக போராடத்தான் வேண்டும். விவசாயிகளுக்காக போராடத்தான் வேண்டும். ஆனால் போராட்டங்கள் திடீர் ரசங்கள் ஆகவோ அல்லது தேர்தல்மைய நோக்கு நிலையில் இருந்து சிந்திக்கப்பட்டவைகளாகவோ இருக்கக்கூடாது. மக்களை ஒரு திரளாக கூட்டிக் கட்டும் நோக்கிலானாவைகளாக இருக்க வேண்டும்.
2009க்கு பின்னர் தீர்க்கப்படாத பிரச்சினைகளில் ஒன்று மீனவர் பிரச்சினை அது மீனவர்களின் பிரச்சினை தான் என்றாலும் அதை மீனவர்களால் தீர்த்துக் கொள்ள முடியாது. அதை மீனவர்களே தீர்த்துக் கொள்ளட்டும் என்று இதுவரை காலமும் இழுபட விட்டதில் ஒரு தந்திரம் உண்டு. இருதரப்பு மீனவர்களையும் மோத விட விரும்பும் சக்திகள் அதனால் வெற்றி பெறுகின்றன. எனவே அதை மீனவர்களுக்கு இடையிலான மோதலாக உருப்பேருக்காமல் அதை எப்படி மீனவர்களைப் பிரிக்க முயலும் சக்திகளுக்கு எதிரான போராட்டமாக மாற்றுவது என்று சிந்திக்க வேண்டும்.
ஆனால் மீனவர்களின் விவகாரத்தை கையில் எடுக்கும் பெரும்பாலான அரசியல்வாதிகள் மீனவர்களின் வாக்கு வங்கியை குறிவைத்தே முடிவெடுடுகின்றனர். அல்லது முடிவெடுக்காமல் ஒத்தி வைக்கின்றனர் என்பதே கடந்த 12ஆண்டுகால அனுபவம் ஆகும்.இந்த விவகாரத்தை மீனவர்களின் வாக்கு வங்கிகளை பாதுகாப்பது என்ற அடிப்படையில் மட்டும் சில தமிழ் கட்சிகள் சிந்திப்பதாக தெரிகிறது. ஒரு தேசத்தை நிர்மாணிப்பது என்ற அடிப்படையில் அதாவது மக்களை ஒரு திரளாக கூட்டிக் கட்டுவது என்ற அடிப்படையில் அவர்கள் சிந்திப்பதாக தெரியவில்லை.அப்படி சிந்தித்திருந்திருந்தால் அவர்கள் பின்வரும் விடயங்களை கவனத்திலெடுத்திருப்பார்கள்.
முதலாவதாக, இந்த விடயத்தை இந்திய-இலங்கை அரசுகள்தான் பேசித் தீர்க்க வேண்டும். எனவே மக்கள் பிரதிநிதிகள் முதலில் இரண்டு அரச பிரதிநிதிகளோடும் பேசவேண்டும். தமிழ்மக்களின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் அல்லது கொழும்பிலுள்ள தூதரகம் போன்றவற்றினூடாக இந்திய மத்தியஅரசோடு அதைக்குறித்துப் பேச வேண்டும். அதேசமயம் தமிழக மீனவர்கள் சம்பந்தப்படுவதால் தமிழக அரசோடும் சம்பந்தப்பட்ட தமிழக அமைச்சரோடும் பேசவேண்டும். இதுவிடயத்தில் ஈழத்துமக்கள் பிரதிநிதிகளும் தமிழக அரசும், மக்கள் பிரதிநிதிகளும் செயற்பாட்டாளர்களும் தங்களுக்கிடையே ஒரு கூட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும். கட்சி பேதமின்றி ஈழத்திலும் தமிழகத்திலும் உள்ள (பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்று விரும்புகின்ற எல்லா தரப்புக்களும்) ஒன்றுபடவேண்டும். அதன்மூலம் இந்திய மத்திய அரசை நோக்கி அழுத்தத்தை பிரயோகிக்கலாம். அதேசமயம் இலங்கை அரசாங்கத்தை நோக்கியும் அழுத்தத்தை கொடுக்கலாம்.
இரண்டாவதாக,,எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கொலை செய்வதை அல்லது அவர்களுடைய படகுகளை மூழ்கடித்து அவர்களை நீரில் மூழ்கி இறக்கவைப்பதை ஈழத்தமிழர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது. இதுவிடயத்தில் ஈழத் தமிழர்களின் நிலைப்பாடு எப்படி இருக்கவேண்டும் என்று சொன்னால் கடற்படையால் கொல்லப்படும் இந்திய மீனவர்கள் தொடர்பில் இந்திய மீனவர்களின் பக்கமே ஈழத்தமிழர்கள் நிற்க வேண்டும். அதேசமயம் எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்கள் ஈழத்துக் கடலின் வளங்களைச் சுரண்டும்போதும் கடலின் கருவளத்தை அழிக்கும் போதும் ஈழத்து மீனவர்களின் பக்கமே ஈழத்தமிழர்கள் நிற்க வேண்டும். எனவே இது ஒரு நுட்பமான விடயம். கத்தியில் நடப்பது போன்றது. கவனமாக கையாள வேண்டும்.
அதாவது போராட்டத்தின் இலக்குகள் குறித்து பொருத்தமான அரசியல் தரிசனங்கள் இருக்கவேண்டும். ஆனால் அவ்வாறான தரிசனங்கள் எவையும் கடந்தகிழமை கடலில் இறங்கிப் போராடியவர்களிடம் இருப்பதாக தெரியவில்லை. அவர்கள் உட்கட்சிப் பூசல்களை இவ்வாறான போராட்டங்களின் மூலம் மேவிச்சென்று கட்சிக்குள் தமது நிலைகளை பலப்படுத்த முயல்கிறார்களா என்ற சந்தேகம் உண்டு. மீனவர்களுக்காக போராடுவது என்று சொன்னால் அதை அவர்கள் எப்பொழுதோ செய்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்த அரசியல்வாதிகள் அந்தக்காலத்திலேயே அதை சட்ட ரீதியாக தீர்த்திருக்கலாம். அதில் இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைத்திருக்கலாம். ஆனால் அக்காலகட்டத்தில் அதை அவர்கள் செய்யவில்லை.
மூன்றாவதாக, ஒரு தேசமாக சிந்தித்து ஈழத்து மீனவர்களின் பிரச்சினைக்காக போராடும் அதே சமயம் அந்தப் போராட்டம் தமிழக மீனவர்களுக்கு எதிரானதாக மாறாதபடிக்கு அதை பக்குவமாகத் திட்டமிட வேண்டும். அதை ஒரு தனிக்கட்சி செய்யமுடியாது. சம்பந்தப்பட்ட எல்லா தமிழ் கட்சிகளும் கூட்டாக முடிவு எடுக்க வேண்டும். நினைவு கூர்தல் பொறுத்து கடந்த ஆண்டில் அவ்வாறு கட்சிகள் முடிவெடுத்தன. அதுபோல மீனவர்களின் விடயத்திலும் ஆகக்குறைந்தது ஒரு விவகார மைய கூட்டுக்கு தமிழ் கட்சிகள் போகவில்லை. அதை முன்னெடுத்த கூட்டமைப்பும் ஐக்கியமாகப் போராடவில்லை. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அதில் பங்கு பற்றவில்லை. தவிர தமிழரசுக் கட்சிக்குள்ளும் மாவையின் அணி அதில் பங்கெடுக்கவில்லை. அந்தப் போராட்டம் கூட்டமைப்புக்குள் ஐக்கியம் இல்லை என்பதனை வெளிப்படுத்திய ஒரு போராட்டம். எனவே அது தமிழ் மக்களின் ஐக்கியத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அனைத்துக்கட்சி போராட்டமாக வடிவமைக்கப்பட வேண்டும்.
நாலாவதாக, அந்த போராட்டத்தை இரண்டு அரசுகளையம் நோக்கி நீதி கேட்கும் போராட்டமாக வடிவமைத்திருக்க வேண்டும்.மாறாக அது இந்திய மீனவர்களுக்கு எதிரானது என்று வியாக்கியானம் செய்யத்தக்க விதத்தில் மாறாட்டம் செய்யப்படக் கூடிய விதத்தில் போராடி இருந்திருக்கக் கூடாது. அதாவது சம்பந்தப்பட்ட தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக நின்று ஒரு திரளாக நின்று மீனவர்களுக்காக முதலில் சம்பந்தப்பட்ட அரசுகளோடு உரையாடி இருக்க வேண்டும். அது வெற்றி பெறவில்லை என்றால் போராடி இருந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அதனால்தான் அப்போராட்டம் வாக்குவேட்டை அரசியல் நோக்கிலானதா? என்று கேட்க வேண்டியிருக்கிறது. அல்லது கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி பூசல்களைக் கடந்து தனது தலைமைத்துவத்தை நிலைநாட்ட விரும்பும் ஒரு பகுதியினர் அப்போராட்டத்தை முன்னெடுத்தார்களா? என்ற கேள்விக்கும் எழுகிறது.
இரண்டு மீனவ சமூகங்களுக்கிடையிலான ஒரு விவகாரத்தை, இரண்டு நாடுகள் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரத்தை, ஒரு சர்வதேசக் கடல் எல்லை சம்பந்தப்பட்ட ஒரு விவகாரத்தை, ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் தொடர்ந்தும் தீர்க்கப்படாமல் இருக்கும் ஒரு விவகாரத்தை, மிகக் குறிப்பாக தமிழக மீனவர்களின் உயிர்களும் ஈழத்து மீனவர்களின் சொத்துக்களும் வளங்களும் அழிக்கப்படும் ஒரு விவகாரத்தை, அதற்குரிய பக்குவத்தோடு அணுகியிருந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு சிந்திக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக கட்சிக்குள் தமது நிலைகளை பலப்படுத்தும் உள்நோக்கத்தோடு சில மக்கள் பிரதிநிதிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறார்களா?
ஏற்கனவே கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் வெற்றி பெறாத போராட்டங்கள் பல உண்டு.காணிக்கான போராட்டம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம், அரசியல் கைதிகளுக்கான போராட்டம், பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் போன்றவற்றோடு மீனவர்களின் விவகாரமும் தீர்க்கப்படாத ஒரு பிரச்சினைதான்.ஆனால் அது முன் கூறப்பட்ட விவகாரங்கள் போல ஒரு தொடரான போராட்டமாக முன்னெடுக்கப்படவில்லை. ஏனெனில் அது முன்பு கூறப்பட்ட விவகாரங்களில் இருந்து வேறுபட்டது. முன்கூறப்பட்ட போராட்டங்களில் யாருக்கு எதிராகப் போராடுவது என்பதிலும் யாரிடம் நீதி கேட்பது என்பதில் ஒரு தெளிவு இருந்தது. ஆனால் மீனவர்களின் விவகாரத்தில் யாருக்கு எதிராக போராடுவது என்பதில் ஒரு தெளிவின்மை ஒரு கலங்கலான நிலைமை காணப்படுகிறது.
அது தமிழக மீனவர்களுக்கு எதிரானதா? அல்லது அப்பாவி மீனவர்களை தொழிலுக்கு அனுப்பிவிட்டு கரையிலிருந்து உழைக்கும் பெருமுதலாளிகளுக்கு எதிரானதா? அல்லது அப்பெருமுதலாளிகளுக்கு சாதகமாக சிந்திக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்கு எதிரானதா? அல்லது எல்லை தாண்டும் மீனவர்கள் தமிழர்கள் என்பதற்காக அவர்களின் உயிரைப் பொருட்படுத்தாத இலங்கை அரசாங்கத்துக்கு எதிரானதா? அல்லது ஓர் அனைத்துலக கடல் எல்லைக்கு அப்பால் கொல்லப்படும் தனது பிரஜைகளைக் குறித்து உருப்படியான நடவடிக்கைகளை எடுக்காத தமிழக அரசுக்கு எதிரானதா? அல்லது தமிழக அரசு கேட்டுக் கொண்டாலும் இது விடயத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய இந்திய மத்திய அரசுக்கு எதிரானதா? அல்லது இரு தரப்பு மீனவர்களையும் பகைவர்களாக்க முயற்சிக்கும் இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிரானதா ? அல்லது குறிப்பிட்ட சுற்றுச்சூழலுக்கு விரோதமான முறைமைகளைப் பயன்படுத்தி மீன்களைப் பிடிக்கும் உலகளாவிய முறைகளுக்கு எதிராக வலிமையான சட்டங்களை உருவாக்கத் தவறிய இலங்கை அரசாங்கத்துக்கும் சம்பந்தப்பட்ட தமிழ் அரசியல்வாதிகளுக்கும் எதிரானதா? என்பதை குறித்து போராட முதல் தீர்க்கதரிசனத்தோடு முடிவெடுக்க வேண்டும்.
இதுவிடயத்தில் கொல்லப்படும் தமிழக மீனவர்கள் தமிழர்கள் என்பதனால்தான் கொல்லப்படுகிறார்கள் என்பதனை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். எல்லை தாண்டும் மீனவர்கள் தமிழர்கள் அல்லாத வேறு இந்திய இனங்களாக இருந்தால் அவர்களை இலங்கை கடற்படை எப்படி அணுகும்? என்ற கேள்விக்கும் விடை காண வேண்டும்.
எனவே நிதானமாகவும் ஒரு தேசமாக சிந்தித்தும் அணுகப்பட வேண்டிய ஒரு விவகாரத்தை கட்சிக் கண் கொண்டு அல்லது தேர்தல் கண் கொண்டு அல்லது கட்சிக்குள் காணப்படும் உட்பகைகளை முறியடித்து தனது தலைமைத்துவத்தை காப்பாற்ற முயலும் சில அரசியல்வாதிகளின் கண்கொண்டு அணுகக்கூடாது. கடந்த கிழமை நடந்த போராட்டமானது மக்கள் மயப்பட்டவில்லை. மிகவும் உணர்ச்சிகரமான, இரண்டு சமூகங்கள் சம்பந்தப்பட்ட ஒரு விடயத்தை நிதானமாக கையாள வேண்டும் என்ற முன்னெச்சரிக்கையின்றி முன்னெடுக்கப்பட்ட ஒரு போராட்டம் அது. யார் எதிரி என்பதில் போதிய தெளிவின்றி முன்னெடுக்கப்பட்ட ஒரு போராட்டம் அது. கடந்த 12ஆண்டுகளாக தமிழ்மக்களால் முன்னெடுக்கப்பட்ட வெற்றி பெறாத போராட்டங்களின் வரிசையில் அது சேர்த்துக்கொள்ளப்படும். அதேசமயம் தமிழ் அரசியல்வாதிகள் கட்சிகளையும் தலைமைத்துவத்தையும் வாக்கு வங்கியையும் கட்டியெழுப்புவது பற்றி சிந்திக்கிறார்களே தவிர தேசத்தைக் கட்டியெழுப்புவது பற்றி சிந்திக்கவில்லை என்பதனையும் நிரூபித்த ஒரு போராட்டம் அது.
நிலாந்தன்