புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிரியந்த குமார – இலங்கை மற்றும் பாகிஸ்தான் முக்கிய கலந்துரையாடல்!

பிரியந்த குமார – இலங்கை மற்றும் பாகிஸ்தான் முக்கிய கலந்துரையாடல்!

1 minutes read

பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் குழுவொன்றினால் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பு, இழப்பீடு தொடர்பான விடயங்கள் குறித்து இலங்கையும் பாகிஸ்தானும் கலந்துரையாடியுள்ளன.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட்டை சந்தித்து நேற்று (வியாழக்கிழமை) இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் நம்பிக்கையையும் எடுத்துரைத்த அமைச்சர், மறைந்த பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க பாகிஸ்தான் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த சனிக்கிழமை, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதை நினைவுகூர்ந்த அமைச்சர், அவர் தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, விசாரணையின் அனைத்து தகவல்களையும் விரைவில் இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்தார் எனவும் கூறியுள்ளார்.

இந்த விசாரணையை தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்றுள்ள பாகிஸ்தான் பிரதமரின் தலையீட்டையும் வெளியுறவு அமைச்சர் பாராட்டினார். மேலும் சியால்கோட்டில் உள்ள வர்த்தக சமூகம் 100,000 அமெரிக்க டொலர் நன்கொடை மற்றும் பிரியந்த குமாரவின் மாத சம்பளத்தை அவரது மனைவிக்கு வழங்குவதாக அறிவித்ததையும் அவர் வரவேற்றார்.

காலஞ்சென்ற பிரியந்த குமாரவின் இரண்டு பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும், உரிய நேரத்தில் கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இலங்கை அரசாங்கம் கரிசனை கொண்டுள்ளதாக அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

அந்தவகையில் எந்தவொரு இடையூறும் இல்லாமல் ஒவ்வொரு மாதமும், குறித்த சம்பளம் குடும்பத்திற்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கான வழிமுறையை ஏற்பாடு செய்யுமாறு பாகிஸ்தான் தூதரிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு தனது மனமார்ந்த மன்னிப்புகளை தெரிவித்துக்கொண்ட பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், பாகிஸ்தான் அரசு முழு விசாரணைக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதை உறுதி செய்வதாகவும் உறுதியளித்தார்.

பாகிஸ்தானில் வாழும் ஏனைய அனைத்து இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More