11 கட்சிகள் முன்வைத்த இடைக்கால அரசாங்கம் சாத்தியமற்றது என்ற காரணத்தினாலேயே தாம் இராஜாங்க அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டதாக சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இன்று(12) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சேதனப் பசளை உற்பத்தி, மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குபடுத்தல், நெல், தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழ வகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கமத்தொழில் இராஜாங்க அமைச்சராக சாந்த பண்டார நேற்று(11) பதவியேற்றார்.
இதற்கு முன்னதாக இந்த பதவியை ஷஷீந்திர ராஜபக்ஸ வகித்திருந்தார்.
எவ்வாறாயினும், சாந்த பண்டார இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்தமை, கட்சி கொள்கையை காட்டிக் கொடுக்கும் செயலென ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கட்சியின் கொள்கைக்கு எதிராக செயற்பட்ட சாந்த பண்டாரவை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கும் அவருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.