கொழும்பில் நேற்று கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேரை தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதம நீதிவான் சந்தன அமரசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
சட்டம், ஒழுங்கைமீறல் உட்பட மேலும் சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெண்கள் மீதான வன்முறைகளுக்குக் கண்டனம் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணி நேற்று வீதிப் பேரணியையும், வீதி நாடகத்தையும் முன்னெடுத்தது.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமான பேரணி, ஐ.நா. அலுவலகம் சென்ற பின்னர் அங்கு வீதி நாடகம் நடத்தப்பட்டது. இதற்குப் பொலிஸார் இடையூறு விளைவித்தனர்.
அதன்பின்னர் ஜனாதிபதியின் வதிவிடம் நோக்கி மகளிர் அணி செல்ல முற்பட்ட போது , பொலிஸார் தடுத்து நிறுத்தினர். இதன்போது வீதி நாடகத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார். இதனால் பதற்ற நிலை உருவானது.
ஹிருணிகா உள்ளிட்ட குழுவினர் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையம் நோக்கிச் சென்றனர். அங்கு சத்தியாக்கிரகத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையிலேயே ஹிருணிகா உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
இன்று அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணை வழங்கப்பட்டுள்ளது.