“ஒற்றையாட்சி முறையை அகற்றுவது பற்றி சிந்திப்பதற்குக் கூட சிங்களத் தரப்பில் ஆளும் கட்சி உட்பட எந்தக் கட்சியும் தயாராக இல்லை. இந்த நிலைமையில் அரசியல் தீர்வு பற்றி பேசுவதற்கு என்னதான் இருக்கின்றது?”
– இவ்வாறு தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இப்படிக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“ஜனாதிபதியும், அவரின் அரசும் வெளிநாடுகளின் கருணையில் ஆட்சியில் நீடிக்கும் நிலையில் தமிழர் தரப்புகளுடன் அரசியல் பேச்சு ஒன்று அவசியமாகவும் அவசரமாகவும் அவர்களுக்குத் தேவைப்படுகின்றது.
அதேநேரத்தில் இனப்பிரச்சினையை உக்கிரமடையச் செய்து, நாட்டைப் பற்றி எரிய வைத்த ஒற்றையாட்சி முறையை அகற்றுவது பற்றி சிந்திப்பதற்குக் கூட சிங்களத் தரப்பில் ஆளும் கட்சி உட்பட எந்தக் கட்சியும் தயாராக இல்லை.
இந்த நிலைமையில் அரசியல் தீர்வு பற்றி பேசுவதற்கு என்னதான் இருக்கின்றது? சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஷ்டி எனப்படும் இணைப்பாட்சி முறையை உறுதியுடன் வலியுறுத்தி நிற்பதைத் தவிர தமிழ்த் தேசிய தரப்புக்கு இப்போது வேறு தெரிவு எதுவும் கிடையாது.
நீதியான முறையில், விட்டுக் கொடுப்போடு, பிரச்சினையை அணுகுவதற்கு சிங்கள தரப்புகள் முன்வராத வகையில் பிரச்சினை என்பது தொடர்ந்து நீடிக்கவே செய்யும் என்ற செய்தி தமிழர் தரப்பால் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும். அதற்குரிய சந்தர்ப்பம் இதுவாகும்” – என்றுள்ளது.