நாடாளுமன்றத்தில் இன்று ‘சீனா வீட்டுக்குப் போ’ என்ற கோஷத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எழுப்பினார். இதன்போது சாணக்கியனுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கும் இடையில் கடும் வாதவிவாதங்கள் இடம்பெற்றன.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், இன்று தமது உரையின் போது ‘சீனா வீட்டுக்குப் போ’ என்ற கோஷத்துக்குத் தலைமையேற்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தார். இதன்போதே இந்த வாத விவாதங்கள் ஆரம்பமாகின.
இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்குச் சீனா உதவவில்லை என்றும், அதற்குப் பதிலாக சீனா, தொடர்ந்தும் இலங்கையை கடன் பொறிக்குள் வைத்திருக்கவே முயற்சிக்கின்றது என்றும் சாணக்கியன் குற்றம் சுமத்தினார்.
“நான் நேற்றுமுன்தினம் நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்குக் கொழும்பில் உள்ள சீனத் தூதரகப் பேச்சாளர், ருவிட்டரில் பதில் வழங்கியுள்ளார். இது, இலங்கை மக்களின் இறைமைக்கு எதிரான செயலாகும்” என்று சாணக்கியன் குறிப்பிட்டார்.
“எனவே, சீனாவின் இந்த செயற்பாடு நிறுத்தப்பட வேண்டும். இதைவிடுத்து 22 மில்லியன் இலங்கை மக்களுக்குச் சீனா நன்மை செய்ய வேண்டுமானால், இலங்கைக்கு வழங்கியுள்ள கடனை இரத்துச் செய்ய வேண்டும் அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்காக மறுசீரமைப்புக்கு உதவ வேண்டும்” என்றும் சாணக்கியன் கோரிக்கை விடுத்தார்.
இந்தநிலையில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, சாணக்கியனுக்குத் தமது கருத்தை வெளியிட உரிமையுள்ள போதும், சர்வதேச நாடுகளுடன் இணைந்து செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அத்துடன் ‘சீனா வீட்டுக்குப் போ’ என்ற கோஷம் தொடர்பிலும் ஹர்ஷ தனது கருத்தை வெளியிட்டார்.
எனினும், ஹர்ஷ டி சில்வாவின் கருத்தை ஆட்சேபித்து சாணக்கியன் குரல் எழுப்பினார்.
எனினும், அவருக்கு சபைக்குத் தலைமை தாங்கிய உறுப்பினர் அனுமதி வழங்காத நிலையில், தமது கட்சியின் உறுப்பினரின் கருத்துக்கு எதிர்க்கட்சியின் உறுப்பினரான ஹர்ஷ டி சில்வா, விமர்சனம் வெளியிட முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விவாதித்தார்.
இதன்போது இரண்டு தரப்புக்கும் இடையில் கடும் வாதவிவாதங்கள் இடம்பெற்றன.