கொழும்பில் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் இறுதிக்கிரியைகள் ஆயிரக்கணக்கானோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.
அவரது பூதவுடல், கொழும்பு மலர் வீதியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் பொரளை பொது மயானத்தில் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.
இறுதிக்கிரியைகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றனர்.
இதேவேளை, தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பில் அவரது நிறுவனப் பணியாளர்கள், சாரதி, பொரளை பொதுமயான சேவையாளர்கள் உள்ளிட்ட 30 இற்கும் அதிகமானோரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், தினேஷ் ஷாப்டரின் கார் பயணித்த பகுதிகளில் உள்ள 42 சி.சி.ரி.வி. கமராக்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.
தினேஷ் ஷாப்டர் கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக அவரது தொலைபேசிக்கு அழைப்பை மேற்கொண்ட நபர் மற்றும் கிரிக்கெட் வர்ணணையாளரான பிரைன் தோமஸ் ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 15ஆம் திகதி மாலை பொரளை பொது மயானத்துக்கு அருகில் கைகளும், கால்களும் கட்டப்பட்டுப் பலத்த காயங்களுடன் காரில் இருந்த நிலையில் மீட்கப்பட்ட தினேஷ் ஷாப்டர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் அன்றிரவு உயிரிழந்தார்.