தமிழர்களைக் கோபப்படுத்தி வீதிக்கு இறங்க வைக்கும் நிகழ்வே வடக்கில் நடத்தவிருக்கும் சுதந்திர தின நிகழ்வு என்று அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“இலங்கையில் தமிழர்கள் சுதந்திரத்தை அனுபவித்ததாக வரலாறு இல்லை. குறிப்பாக பிரித்தானியாவிடமிருந்து ஆட்சி கைமாறியதைத் தொடர்ந்து அரச பயங்கரவாதத்தின் வன்முறைகளுக்கும், இனவாதத் தாக்குதல்களுக்கும் முகம் கொடுத்தவர்கள் தொடர் இன அழிப்புக்கும் முகம் கொடுத்து திட்டமிட்ட இனப்படுகொலையையும் அனுபவித்து தொடர்ந்து பல்வேறு முகங்களில் நடக்கும் இன அழிப்பையும் சந்தித்து வருகின்றனர்.
வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழர்களும் அதனால் பாதிப்புற்று அவலங்களைச் சந்தித்துள்ளதோடு மலையகத் தமிழர்களும் சலனமற்ற இன அழிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் வடக்கின் யாழ்ப்பாணத்தில் 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் நடத்த அரச தரப்பினர் திட்டமிடுவதும், அதுவும் சிங்கள பௌத்தத்தை முன் நிறுத்தி நடத்த முனைவதும் பேரினவாத ஆதிக்க மனப்பான்மையை மட்டும் அல்ல தமிழர்களைப் புண்படுத்தும் உள்நோக்கம் கொண்டதுமாகும்.
இதனை வன்மையாக எதிர்ப்பதோடு இது நிறுத்தப்பட வேண்டும். இல்லையெனில் பாரிய மக்கள் எதிர்ப்பையும் வீதிப் போராட்டங்களையும் சந்திக்க வேண்டி ஏற்படும்” – என்றுள்ளது.