ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய பேச்சுக்கள் தொடர்பான முழு விவரங்களையும் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேக்கு எடுத்துரைத்துள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நேற்று மாலை ஜனாதிபதியுடன் முதலில் சந்திப்பு நடந்தது. வடக்கு – கிழக்கில் பெரும்பான்மையானவர்கள் தமிழ்பேசும் மக்கள். எந்த விடயம் என்றாலும் வடக்கு – கிழக்கைப் பிரித்து உங்களின் செயற்றிட்டங்களை முன்னெடுக்க இடமளிக்கமாட்டோம். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் வடக்கு – கிழக்கின் தனியலகு தொடர்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் தீர்வு முயற்சிகளையும் நீங்கள் மேற்கொள்ளவேண்டும். வடக்கு – கிழக்கைப் பிரித்து பேச்சு நடத்த விரும்பினால் எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அதில் பங்கேற்கமாட்டோம் என்று ஜனாதிபதியிடம் தெரிவித்தோம்.
எமது கருத்துக்களை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். வடக்கு – கிழக்கை இணைத்துத்தான் அனைத்துப் பேச்சுக்களையும் முன்னெடுப்போம் என்று ஜனாதிபதி பதிலளித்தார்.
ஜனாதிபதியுடனான பேச்சு முடிவடைந்த பின்னர் இந்தியத் தூதரகத்துக்கு நான், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சென்றோம்.
ஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களை இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயிடம் விரிவாக எடுத்துரைத்தோம்.
வடக்கு – கிழக்கைப் பிரித்து அரசு மேற்கொள்ளும் எந்த வேலைத்திட்டத்தையும் ஆதரிக்கோம் என்பதை ஜனாதிபதியிடம் எடுத்துக்கூறியுள்ளோம் என்பதை இந்தியத் தூதுவருக்கு விசேடமாக சுட்டிக்காட்டினோம்.
இந்தியா எமது அயல்நாடு. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் தீர்வு விடயம் தொடர்பிலும் அன்று தொடக்கம் இன்று வரை இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்துவரும் நாடு.
எனவே, இந்தியாவின் ஆலோசனைகளை நாங்கள் பெறுவோம். எமது பிரச்சினைகளையும் இந்தியாவுக்கு எடுத்துரைப்போம். அந்தவகையில்தான் இந்தியத் தூதுவரைச் சந்தித்தோம்.” – என்றார்.
– அரியகுமார் யசீகரன்