யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துக்கள் தொடர்பில் யாழ். மாவட்டச் செயலகத்தில் நாளை இடம்பெறவுள்ள ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படும் என்று யாழ். மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் இந்த மாதத்தில் மாத்திரம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். யாழ். நகரப் பகுதியில் நேற்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பத் தலைவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மிக ஒடுக்கமான வீதியின் இரு மருங்கிலும் வாகனங்கள் நிறுத்தி வைத்திருந்தமை மற்றும் நெருக்கடியான நேரத்தில் கனரக வாகனங்களை அந்த வீதியின் ஊடாகப் பயணிக்க அனுமதித்தமை போன்ற காரணங்களாலேயே இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட்டுள்ளனர்.
இதேவேளை, யாழ். நகரில் வீதி நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மிக ஒடுக்கமான வீதிகளிலும் சன நெரிசல் அதிகமான வீதிகளிலும் பகல் நேரங்களில் கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு அனுமதிப்பது மற்றும் கடைகளுக்கு முன்பாக வாகனங்களை நிறுத்த அனுமதிப்பது தொடர்பில் பரிசீலனை செய்யவேண்டும் என்றும் சமூகவலைத்தளப் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விடயங்கள் தொடர்பில் யாழ். மாவட்ட செயலரை தொடர்புகொண்டு கேட்ட போதே, வீதி விபத்துக்கள் தொடர்பில் நாளை புதன்கிழமை நடைபெறும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படும் என்று குறிப்பிட்டார்.
கடந்த 4ஆம் திகதி நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் வீதி விபத்துக்கள் தொடர்பில் ஆராயப்பட்டிருந்தாலும் உறுதியான தீர்மானம் எதுவும் எட்டப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையிலேயே நாளை மீளவும் அது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.