யாழ்ப்பாணத்தில் கூடிய இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ரெரோ, புளொட், தமிழ்த் தேசியக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்களும், முக்கியஸ்தர்களும் மேற்படித் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் மிகப் பெருமெடுப்பில் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மருதனார்மடத்திலிருந்து யாழ். நகர் வரை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. அந்தப் போராட்டம் காலை 9 மணியளவில் ஆரம்பிக்கப்படும். இது தொடர்பாக மக்களுக்கு விளக்கம் அளிக்கும் துண்டுப்பிரசுரங்கள் இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ளன.
அதன்பின்னர் முல்லைத்தீவை முடக்கிப் போராட்டம் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகளின் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு செல்லவும் நேற்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன் (தமிழ் மக்கள் கூட்டணி), எம்.ஏ.சுமந்திரன் (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி), த.சித்தார்த்தன் (புளொட்) ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈ.பி.ஆர்.எல்.எப்.), எம்.கே.சிவாஜிலிங்கம் (தமிழ்த் தேசியக் கட்சி) ஆகியோரும், சி.வி.கே.சிவஞானம் (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி), தியாகராஜா நிரோஷ் (ரெலோ), பா.கஜதீபன் (புளொட்), க.சர்வேஸ்வரன் (ஈ.பி.ஆர்.எல்.எப்.), எஸ்.கலையமுதன் (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி) ஆகியோரும் கலந்துகொண்டனர்.