நீர்கொழும்பு வைத்தியசாலையில் மீள் மரண விசாரணை மற்றும் மீள் உடற்கூற்றுப் பரிசோதனை நிறைவு பெற்ற பின்னர் சாந்தனின் பூதவுடல் இன்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்தியாவின் நயவஞ்சகத்தால் சாகடிக்கப்பட்ட ஈழத்தமிழன் சாந்தன் என்று அழைக்கப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் பூதவுடல் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்றுப் பகல் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரின் பூதவுடலைப் பெறுவதில் தாமதம் நிலவியது. நீண்ட இழுபறியின் பின்னர் சாந்தனின் பூதவுடலை விமான நிலைய அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
அதன்பின்னர் மாலை வேளையிலேயே மீள் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்குப் பூதவுடல் கொண்டு செல்லப்பட்டது.
பூதவுடலை நேற்று இரவு பார்வையிட்ட நீர்கொழும்பு நீதிவான், சாந்தனின் இரத்த உறவுகள் இருவர் முன்னிலையில் மீள் மரண விசாரணைகளை முன்னெடுத்த பின்னரே மீள் உடற்கூற்றுப் பரிசோதனையை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதற்கமைய இன்று பகலே மீள் மரண விசாரணை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீள் உடற்கூற்றுப் பரிசோதனையை நடத்துவதில் நீர்கொழும்பு வைத்தியசாலை நிர்வாகம் தாமதம் காட்டியது.
எனினும், சகல பரிசோதனைகளும் நிறைவு பெற்று பூதவுடல் இன்று மாலை தம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்று சாந்தனின் சகோதரன் மதிசுதா தெரிவித்தார்.
சாந்தனின் பூதவுடலை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.