கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகேவால் இந்தத் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூரகல விகாரை தொடர்பில் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் ஞானசார தேரர் வௌியிட்ட கருத்து, தேசிய நல்லிணக்கம் மற்றும் மத நல்லிணக்கத்துக்குக் குந்தகம் விளைவித்தது என்று அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் இரண்டு குற்றப்பத்திரங்களிலும் ஞானசார தேரர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்தார்.
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் பொலிஸில் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை மையப்படுத்தி, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஞானசார தேரருக்கு எதிராகச் சட்டமா அதிபரால் மேற்படி இரண்டு குற்றப்பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.