யாழ். கல்வியங்காட்டிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என்பது தொடர்பாகப் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.
இந்த விடயம் சம்பந்தமாக எங்களுடைய கட்சி இன்னமும் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வரவில்லை. ஆனால், தனிப்பட்ட வகையில் என்னைப் பொறுத்தவரையில் இது எவ்வாறாயினும் நடைமுறைச் சாத்தியமாகாது.
பொது வேட்பாளரைத் தேடிப் பிடிப்பதற்குள்ளேயே முரண்பாடுகள் பல வந்து சேரும். ஏற்கனவே நிலைமைகள் அப்படித்தான் இருக்கின்றன. ஆகவே, தனிப்பட்ட வகையில் என்னுடைய கருத்து என்னவெனில் பேரம் பேச வேண்டிய சூழ்நிலைக்கு ஒற்றுமையாகப் பலமாக நாங்கள் இருக்க வேண்டும். அந்தப் பலத்தோடு நாங்கள் பேரம் பேசலாம்.
ஆனால், ஒரு பொது வேட்பாளர் என்றால் ஏனைய வேட்பாளர்களோடு நாங்கள் சமநிலையில் நிற்கின்றபோது சில சமயங்களில் எங்களது பேரம் பேசும் பலம் குறைவாக இருக்கலாம். அல்லது அவர்கள் எங்களோடு பேரம் பேசாமலும் போகலாம்.
இவ்வாறான சூழல்களும் இருப்பதாலே என்னுடைய தனிப்பட்ட கருத்து இது ஒரு பொது வேட்பாளரைத் தெரிவு செய்வதிலேயே முடங்கி விடும். அல்லது சாத்தியமற்றதாக அமையும். அது பிரதேச வாதங்களுக்கு இடங்கொடுக்கக் கூடிய வாய்ப்பாகவும் அமையும். எனவே, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் வேட்பாளரைத் தெரிவு செய்வதிலேயே முடங்கி விடும். அல்லது சாத்தியமற்றதாக அமையும்.
பொது வேட்பாளர் தெரிவில் பொது வேட்பாளர் எந்தக் கட்சி என்ற விடயத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். ஆகவே, அனைத்து விடயங்களையும் பார்க்கின்றபோது இது நடைமுறைச் சாத்தியமற்றது என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஆனாலும், கட்சி இனிக் கலந்து பேசி முடிவுக்கு வரலாம். அதன் பிறகு அதனோடு நாங்கள் உடன்படுவதா? இல்லையா? என்பதையும் தீர்மானிக்கலாம்.” – என்றார்.