செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்க தயார் | அனந்தி சசிதரன் அறிவிப்பு!

தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்க தயார் | அனந்தி சசிதரன் அறிவிப்பு!

2 minutes read

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராக போட்டிடுவதற்கு தயார் என்று ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமும்,  வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன் அறிவித்துள்ளர்.

வடமராட்சி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பைச் செய்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 15 ஆண்டுகள் கழிந்த நிலையில், ஆண்டாண்டு காலமாக ஈழத்தமிழர் மீது இழைக்கப்பட்டு வருகின்ற சர்வதேசக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலுக்கு இலங்கை அரசை உள்ளாக்க சர்வதேச அழுத்தம் ஒன்றே ஈழத்தமிழர் தேசத்திடம் எஞ்சியுள்ள வழிவகையாக உள்ளது. இதுவே மூலோபாய முன்னெடுப்புக்கான பாதை.

ஈழத் தமிழருக்கான சர்வதேச அரசியலை முன்னெடுப்பதில் கட்சிகளுக்கிடையே ஒற்றுமையற்ற சூழலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சூழல் உருவாக்கியுள்ளது.

ஆதலால், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலையில் ஈழத்தமிழருக்கான ஒரு பொதுப் பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்து அவரை ஈழத்தமிழர்களின் நிழல் ஜனாதிபதியாக சர்வதேசம் கணிப்பிடும் நிலையைத் தோற்றுவிப்பதே காலத்தின் தேவையாக உள்ளது.

இருப்பினும் இதைச் சரிவரச் செய்யவேண்டுமானால், ஆக்கிரமித்துள்ள தேசத்தின் ஜனாதிபதி வேட்பாளர் எவரையும் விட அதிக வாக்குகளைப் பெறும் வகையில் ஒருவரை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள ஈழத்தமிழர் தேசம் தகுந்த தேர்தல் விஞ்ஞாபனத்தோடு நிறுத்தவேண்டும். அவர் அதிக வாக்குகளால் வெற்றிபெறவேண்டும். அவர் எமது நிழல் ஜனாதிபதியாக இயங்கவேண்டும்.

பொதுவேட்பாளரின் முழுமுயற்சியும் இன அழிப்புக்கான சர்வதேச நீதி நோக்கியதாக அமையவேண்டும்.  இதற்குரிய அஞ்சாநெஞ்சத் துணிவும், தகைமையும் வன்மையும் பொருந்திய ஒருவர் ஈழத்தமிழர் நிழல் ஜனாதிபதிக்குரிய பொது வேட்பாளராகத் தெரிவு செய்யப்படவேண்டும்.

இதற்கு அனைத்துக் கட்சிகளையும் ஒத்துழைக்க நிர்ப்பந்திப்பது ஈழத்தமிழர் ஒவ்வொருவரதும் கடமையாகும்.  அதுமட்டுமல்ல, அரச பொறுப்புக்கூறல், சர்வதேச நீதி போன்றவற்றின் தார்ப்பரியங்களைப் புரியாத, அவற்றை எடுத்தாள இயலாத ஒருவர், அதுவும் இவ் விடயங்களில் முன் அனுபவம் எதுவும் இல்லாத ஒருவர் பொதுவேட்பாளராகி இந்தக் கைங்கரியத்தைச் சாதிக்கமுடியாது.

ஆகவே, 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இன அழிப்புப் போரில் பாதிக்கப்பட்ட மக்களின் நேரடிக் குரலாக சர்வதேச நீதி கோரிய பயணத்தில் காத்திரமாகப் பங்கேற்ற தன்மைகளோடு பயணித்து அனுபவமுள்ளவளாகிய நான் அந்தக் களத்தில் பயிற்சி பெற்றுள்ள அனுபவத்தோடு துணிந்து களமிறங்கத் தயாராக உள்ளேன் என்பதை இது குறித்த அக்கறையுள்ள அனைவரின் கவனத்துக்கும் இத்தருணத்தில் கொண்டுவருவது எனது கடமையாகிறது.

அதுவும், எந்தக் கட்சியினதும் அல்லது கூட்டினதும் பிரதிநிதியாக அன்றி, ஈழத்தமிழருக்கான பொதுப் பிரதிநிதியாக என்னை மாற்றிக்கொள்ளவும், இதற்கான பொருத்தமான கொள்கை வகுப்பு மேற்கொள்ளப்படும்போது அதற்குக் கட்டுப்பட்டு இயங்கவும் தயாரக உள்ளேன் என்பதையும் பரந்துபட்ட சமூகத்துக்குத் தெரிவிப்பதும் எனது கடமையாகிறது.

அதுமட்டுமன்றி, இவ்வாறான தன்மைகளோடு என்னை விடவும் ஆற்றலுள்ள வேறு எவரேனும் நம்பகமாக நிறுவப்படக் கூடிய வகையில் முன்வைக்கப்பட்டால் அவ்வாறான வேட்பாளரை ஆதரிக்கவும் நான் தயாராக உள்ளேன் என்பதையும் நான் சுட்டிக்காட்டவும் விரும்புகிறேன்.

ஆகவே, இதற்கான பொருத்தமான கொள்கை வகுப்பை ஏற்படுத்தப்பட்டுள்ள பொதுச்சபை மேற்கொள்ளவேண்டும். அதனால், இதைச் சரிவர மேற்கொள்ள இயலுமா என்பதை நிறுவுவதும் அதை நடைமுறையிற் சாதிப்பதும் ஒட்டுமொத்த ஈழத்தமிழர் தேசத்தின் சமூகப் பொறுப்பாகும்.

பொதுவேட்பாளர் வேண்டுமா வேண்டாமா என்று விவாதித்துக்கொண்டிருப்பதிலேயே காலத்தைச் செலவிட்டு எந்தவித பொறுப்புக்கூறலும் அற்ற வகையில் விவாதங்களை முன்னெடுத்துக்கொண்டிருக்காமல் நடக்கவேண்டிய விடயத்தை பொறுப்புக்கூறலுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இதயசுத்தியுடனும் அணுகவேண்டும்.

இலங்கை அரசின் இன அழிப்புக்கான அரச பொறுப்பைச் சர்வதேச விசாரணைக்கு உள்ளாக்குவதில் சில காத்திரமான நகர்வுகள் பல முனைகளில் இருந்தும் புலம்பெயர் ஈழத்தமிழர் தரப்புகளால் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தவகையில், காத்திரமான நகர்வுகள் முன்னேறிச் செல்லும் வகையில் எமது மூலோபாய முடிவுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More