தளபதி விஜய் ஒட்டுமொத்தமாக சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளார். இந்த செய்தி அனைவருக்கும் தெரிந்த பழைய செய்தி என்றாலும், இதனைப் படிக்கிற, இது குறித்து நினைக்கிற ரசிகர்களால் சாதாரணமாக கடந்து சென்றுவிட முடியாது. காரணம், விஜய் ஒரு நடிகராக மட்டும் தமிழ் சினிமாவில் இருந்து தனது ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தைப் பிடிக்கவில்லை. மக்கள் பிரச்னைகளுக்கு அவர்களோடு நின்றுள்ளார். தனது சினிமா மூலம் மக்களை ஓரளவுக்காவது அரசியல் படுத்த முயற்சித்துள்ளார்.
இன்றைக்கு அவர் கட்சி தொடங்கிவிட்டார் என்பதற்காக, அவர் ஒரு தலைவராக உருவாகிவிட்டார் என பொத்தாம் பொதுவாக கூறிவிட முடியாது. இதற்கு காலம் பதில் சொல்லட்டும். ஆனால் சினிமாவில் அவர் ஒரு சூப்பர் ஸ்டார். இதை மறுக்கவே முடியாது. விஜய் தனது சினிமா வாழ்க்கையினை தொடங்கும்போது, தனக்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் உருவாகும் என நினைத்திருப்பாரா, ஏங்கியிருப்பாரா எனத் தெரியவில்லை.
ஆனால் அவர் சினிமாவில் கால் பதிக்கும்போது பல முன்னணி நடிகர்கள் தங்களுக்கான அரியாசனத்தை அமைத்து அதில் ஒய்யாரமாக அமர்ந்திருந்தனர். தொடர்ந்து தனது அயராத உழைப்பினால், தனது ரசிகர்களை மகிழ்வித்துக்கொண்டே வந்தார்.
ஒரு கட்டத்தில் விஜய்க்கு தொடர்ந்து தோல்விப் படங்களாகவே அமைந்தபோதும், அவரது 50வது படம் சுத்தமாக எடுபடாதபோதும், “அவ்வளாவுதான், இனி விஜய் திரை வாழ்க்கை முடிந்தது. இனி விஜய்க்கு இறங்குமுகம்தான் எனக் கூறினார்கள். ஆனால் அவரது ரசிகர்கள் அவருக்கு பக்கபலமாக இருந்து விஜய்யின் இருண்ட காலத்தில் தெம்பு கொடுத்தனர் என்றே கூறவேண்டும். கேலி: அப்பா, ஒரு டைரக்டர் அதனால விஜய்க்கு சினிமாவுல சான்ஸ் ரொம்ப ஈசியா கிடச்சிடுச்சு எனக் கூறியவர்களும், கூறுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
ஆனால் விஜய்க்கு சினிமா வாழ்க்கை பாதை பூக்களால் நிறைந்தது அல்ல. விஜய் அறிமுகமானபோது, முன்னணி வார இதழ் அவரது உருவத்தை கேலி செய்து மிகவும் மோசமாக எழுதியது. பின்னாளில் அவரது பேட்டிக்காக அந்த வார இதழே ஏங்கி காத்திருந்த காலம் எல்லாம் வரலாற்றில் உண்டு.
கண்ணீர்: தான் வளரும் வரை தனது ரசிகர்கள் தேவை, தனக்கான மார்க்கெட் வந்த பின்னர் ரசிகர்கள் தேவையில்லை என நினைக்காமல், அவர்களை சரியான வழியில், வழி நடத்தி, இன்றைக்கு அரசியலுக்கும் அழைத்துச் செல்கின்றார். இது அவரது ரசிகர்களுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், மறுபுறம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் படம் ரிலீஸ் ஆனாலே திருவிழாவைக் போல் மகிழ்ச்சியாக இருக்கும் ரசிகர்களுக்கு அவரது கடைசி படத்திற்குப் பின்னர் அந்த மகிழ்ச்சி கிடைக்கப்போவதில்லை.
சினிமாவை விட்டு விலகப்போகின்றார் என்பது முன்னரே தெரிந்திருந்தாலும், கோட் படம் ரிலீஸ்க்கு முன்னர் வரை அது ரசிகர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் தற்போது கோட் ஃபீவர் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் நிலையில், கடைசி படத்தை நினைத்து ரசிகர்கள் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கின்றனர். ஒன் லாஸ்ட் டைம்: இருக்கின்ற வருத்தம் போதாதென, தளபதியின் கடைசி படத்தை தயாரிக்கும் கே.வி.என் புரெடக்ஷன் நிறுவனம், ஒன் லாஸ்ட் டைம் என்ற ஹேஷ்டேக் மூலம் ரசிகர்களை மேலும் கவலைக்கு ஆழ்த்தியுள்ளது.
இதுமட்டும் இல்லாமல், படத்தின் அறிவிப்பை வெளியிடுகின்றோம் என ரசிகர்களின் மனவலியை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. அந்த வீடியோவைப் பார்த்து அழுத ரசிகர்கள் கோடி. அந்த வீடியோ விஜய் ரசிர்களைக் கடந்து பலரது மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது எனலாம். உச்ச நடிகர்: விஜய் போல் தமிழ் சினிமாவில் நடனமாடக்கூடிய, சண்டைக் காட்சிகளில் நடிக்ககூடிய நடிகர்கள் இல்லை எனலாம். இத்தனை நாட்கள் படம் ஓடினால்தான் அது வெற்றிப்படம் என்ற காலகட்டத்தில் இருந்தபோதும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தவர் விஜய்.
ஆனால் தற்போது ஒரு படத்தின் வெற்றியை அதன் வசூலை மைய்யப்படுத்தி அளவிடும் காலத்தில் உச்சத்தில் இருக்கும் ஒரே நடிகராக உள்ளார் என்றால் அது மிகையில்லை. ஒரு படத்திற்கு ரூபாய் 200 கோடிகள் வரை சம்பளம் வாங்கும் ஒரே தமிழ் நடிகர் விஜய். சினிமாவில் தனக்காக மார்க்கெட் குறைந்த பின்னர் அவர் அரசியலில் காலடி எடுத்து வைக்க முடிவு செய்யவில்லை. தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும்போது இந்த முடிவை எடுத்துள்ளார். இது தொடர்பாக ஏன் இந்த முடிவு எனக் கேட்டவர்களிடத்தில், ” எனக்கு அவங்க (மக்கள் மற்றும் ரசிகர்கள்) நெறய கொடுத்துட்டாங்க, அவங்களுக்கு திருப்பி எதாவது செய்யனும். அதுதான் சரி” என பதில் அளித்து நெகிழ வைத்தவர் விஜய்.
மிஸ் யூ விஜய்: விஜய்யின் இந்த பதில் பல ரசிகர்களை மேலும் கலங்கச் செய்துள்ளது. அவர் முழுமூச்சில் களமிறங்கவுள்ள அரசியலில் அவரது எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதற்கு காலம் பதில் சொல்லும். தமிழ் சினிமாவில் தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய விஜய்யை திரையில் காண ஏங்கும் ரசிகர்கள் என்றைக்கும் இருப்பார்கள். விஜய்யின் அனைத்து படங்களை ரீ-ரிலீஸ் செய்தாலும், அவரது புது பட ரிலீஸ்க்காக அந்த வெள்ளித்திரைகளே ஏங்கும். 69வது படத்திற்குப் பின்னர் திரையரங்க வாசல்களில் விஜய் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்ததை நினைத்து, அந்த நாள் மீண்டும் வராதா என ஏங்குவார்கள். அண்ணனின் குட்டி குட்டி க்யூட் எக்ஸ்பிரஷன்களை இனி பார்க்கமுடியாது என அவரது நண்பிகளும் ஏங்குவார்கள். ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவே உங்களுக்காக எங்கும் விஜய். வீ மிஸ் யூ விஜய்.
நன்றி : tamil.filmibeat