‘உலகநாயகன்’ கமல்ஹாசன் நடிக்கும் ‘தக்ஸ் லைஃப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக காணொலியை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறார்கள்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தக்ஸ் லைஃப்’ எனும் திரைப்படத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், அசோக் செல்வன், திரிஷா, நாசர், அபிராமி, ஐஸ்வர்ய லட்சுமி, சானியா மல்கோத்ரா, ஜோஜு ஜார்ஜ், பங்கஜ் திரிபாதி, அலி ஃபைசல், ஜிஷு சென்குப்தா, ரோகித் சரப், வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் , மெட்ராஸ் டாக்கீஸ் , ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
பல கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது என படக் குழுவினர் பிரத்தியேக காணொலியை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள்.
இது உலக நாயகனின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது.
இதனிடையே ‘நாயகன்’ எனும் மாபெரும் வெற்றி பெற்ற படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் , மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இந்த திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.