ரணில் விக்கிரமசிங்கவை சிறைக்கு அனுப்பும் வரை தூங்க போவதில்லை என்று குறிப்பிட்டவர்கள் இன்று வெட்கமில்லாமல் ரணில் புகழ்பாடுகிறார்கள். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சஜித் பிரேமதாசவுக்கு முழுமையான ஆதரவு வழங்குவார்கள். செப்டெம்பர் 22 ஆம் திகதி அரசாங்கத்தை பொறுப்பேற்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (07) இடம்பெற்ற ‘அரையாண்டின் அரசிறை நிலைப்பாட்டு அறிக்கை’ தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
மத்திய வங்கி மோசடியை குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் அந்த மோசடியை காட்டிலும் பன்மடங்கு மோசடியான வி.எப்.எஸ் விசா விநியோகத்துக்கு அனுமதி வழங்கியது. இந்த விநியோகத்தினால் அரசாங்கத்துக்கு ஏற்படவிருந்த 4000 கோடி ரூபா வருமானம் இழப்பை உயர்நீதிமன்றத்துக்கு சென்று நாங்கள் தடுத்துள்ளோம்.
ஆளும் தரப்பின் பெரும்பாலானவர்கள் வங்குரோத்து நிலைக்கு மத்தியிலும் இலாபமடைந்துள்ளார்கள்.ஆகவே இவர்களின் சொத்து விபரங்களை ஆராய வேண்டும்.நெருக்கடியின் போது சஜித் அரசாங்கத்தை பொறுப்பேற்கவில்லை என்று ஆளும் தரப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நெருக்கடியின் போது அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு அப்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்தார்.இதன்போது கட்சி என்ற ரீதியில் நாங்கள் நிபந்தனைகளை முன்வைத்தோம்.நாட்டு மக்கள் கோ ஹோம் கோட்டா என்று குறிப்பிடும் போது எவ்வாறு அவருடன் ஒன்றிணைந்து அரசாங்கத்தை பொறுப்பேற்பது.
எமது நிபந்தனைகளை புறக்கணித்து ராஜபக்ஷர்களின் காவலராக அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்து தங்களை பாதுகாத்துக் கொண்டார்கள்.ராஜபக்ஷர்கள் அரசாங்கத்தின் ஊழல்வாதிகளுக்கு எதிராக ஜனாதிபதி எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.எதிர்வரும் 22 ஆம் திகதி மக்களாணையுடன் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை பொறுப்பேற்பார்.
ரணில் விக்கிரமசிங்கவை சிறைக்கு அனுப்பும் வரை தூங்க போவதில்லை என்று குறிப்பிட்டவர்கள் இன்று வெட்கமில்லாமல் ரணில் புகழ்பாடுகிறார்கள்.இவர்கள் கட்சி தாவியிருக்கலாம் ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக உள்ள பாரம்பரியமான பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் மாற்று அரசியல் தீர்மானத்தை எடுக்கமாட்டார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பக்கமே தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் உள்ளார்கள்.சிறந்த கொள்கை திட்டத்தை முன்னிலைப்படுத்தியே எதிர்க்கட்சித் தலைவர் செயற்படுகிறார் என்றார்.