கல்வி அமைச்சும் விளையாட்டுத்துறை திணைக்களமும் இணைந்து நடத்தும் பாடசாலைகள் விளையாட்டுப் போட்டி 2024உடன் தொடர்புடைய ஐந்து மாகாணங்களுக்கான பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளுக்கு சமபோஷ தொடர்ந்தும் அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.
கிழக்கு, வட மத்திய, வட மேல், தென், ஊவா ஆகிய மாகாணங்களில் அந்தந்த மாகாண கல்வித் திணைக்களினால் நடத்தப்படவுள்ள பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளுக்கே சமபோஷ அனுசரணை வழங்குகிறது.
ஊவா மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுநர் போட்டிகள் பதுளை வின்சென்ட் டயஸ் விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடைபெறும்.
தென் மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுநர் போட்டிகள் மாத்தறை கொட்டவில விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதிவரை நடைபெறும்.
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுநர் போட்டிகள் மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் செப்டெம்பர் 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதிவரை நடைபெறும்.
வடமேல் மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுநர் போட்டிகள் குருநாகல் வெலகெதர மைதானத்தில் செப்டெம்பர் 7ஆம் திகதி முதல் 11ஆம் திகதிவரை நடைபெறும்.
வடமத்திய மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுநர் போட்டிகள் செப்டெம்பர் 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதிவரை நடைபெறும்.
இந்த ஐந்து மாகாணங்களிலும் இயங்கும் 2,000க்கும் மேற்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த 18,000க்கும் மேற்பட்ட மெய்வல்லுநர்கள் 70 போட்டி நிகழச்சிகளில் பங்குபற்றவுள்ளனர்.
வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்படுவதுடன் சம்பியனாகும் மாணவ, மாணவிகளுக்கும் பாடசாலைகளுக்கும் கிண்ணங்கள் வழங்கப்படும்.
வட மத்திய மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுநர் போட்டிகளுக்கே முதன் முதலில் சமபோஷ 2015இல் அனுசரணை வழங்கியது. அதன் பின்னர் வட மேல் மாகாணத்திற்கும் 2022முதல் மற்றைய 3 மாகாணங்களுக்கும் அதன் அனுசரணை விஸ்தரிக்கப்பட்டது.
அடுத்த வருடத்திலிருந்து 9 மாகாணங்களுக்கும் அனுசரணை வழங்குவது குறித்து ஆலோசிப்பதாக சிபிஎல் புட்ஸ் க்ளஸ்டர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஞ்சுல தஹநாயக்க தெரிவித்தார்.