“அம்பாறை மாவட்டம், பொத்துவில் – அறுகம்பே பகுதி சுற்றுலா இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படக் கூடும். எனவே, அமெரிக்கப் பிரஜைகள், அங்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.”
– இவ்வாறு இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து அறுகம்பை பகுதி சுற்றுலா இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பகமான தகவல் கிடைத்துள்ளது என்று அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
பயண ஆலோசனையை வெளியிட்டு, அமெரிக்கத் தூதரகம் சந்தேகப்படும்படியான எதையும் கண்டால் 119 என்ற எண்ணுக்கு அழைக்குமாறு தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை அந்தப் பகுதியில் விரைந்த முப்படையினர் உள்ளிட்ட பொலிஸார், சுற்றுலா முக்கியத்துவ இடங்களில் சந்தேகத்துக்கிடமான வாகனங்களை இடைமறித்து சோதனை செய்வதுடன் தற்காலிக வீதித் தடைகளையும் ஏற்படுத்தி அப்பகுதியால் சென்று வரும் வாகனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
அறுகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அறுகம்பே மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் இஸ்ரேலியர்கள் அதிகமாக அலைச்சறுக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும், எனவே அவர்களுக்கு ஆபத்து நேரிடலாம் எனவும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமக்குத் தகவல் கிடைத்துள்ளது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.