ஜனாதிபதி உட்பட அனைவரும் நாட்டின் சட்டத்துக்கு அடிபணிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரின் ஆரம்ப நிகழ்வு இன்று நடைபெற்றது. இதன்போது அரசின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அக்கிராசன உரையை நிகழ்த்தினார்.
அதில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
“தேர்தல் முறைக்கு அமைய பெரும்பாண்மை மக்கள் ஆணை இம்முறை கிடைக்கப்பெற்றுள்ளது. புதிய அரசை அமைப்பதற்கான மக்கள் ஆணையை வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என அனைத்து மக்களுக்கும் இணைந்து வழங்கியுள்ளனர். அனைத்து இன மக்களும் எம் மீது நம்பிக்கை கொண்டு அதிகாரத்தை வழங்கியுள்ளார்கள். எம் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.
தேர்தலில் ஆதரவளித்த, ஆதரவளிக்காத அனைவரையும் இலங்கை பிரஜைகள் என்றே நான் கருதுவேன்.
தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாம் வெவ்வேறு அரசியல் கருத்துக்களைக் கொண்டிருக்கலாம். ஆனால், மீண்டும் இந்த நாட்டில் இனி இனவாத அரசியலுக்கு இடமில்லை. அதேபோன்று மத கடும்போக்குவாதம் தலைதூக்குவதற்கும் இடமளிக்கப் போவதில்லை.
இனவாத மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இங்கு வாழ்கின்றனர். ஒருவருக்கு ஒருவர் இடையே சந்தேகம் குரோதம் அவநம்பிக்கை வலுப்பெற்றுள்ளது. இத்தகைய பின்னணியில் எதிர்கால சந்ததிக்கு அத்தகைய அரசை உருவாக்காதிருக்கும் பொறுப்பு இன்று நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எமக்கு உள்ளது.
நாட்டினுள் ஜனநாயக கோஷங்கள் இருக்க முடியும். ஆனால், எவரும் மீண்டும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இனவாத, மதவாத கோஷங்களைக் கட்டியெழுப்ப இடமில்லை. இந்த மக்கள் ஆணையில் மற்றுமொரு முக்கிய நோக்கம் இருந்தது. நீண்டகாலமாக தொடர்ந்த இத்தகைய மோசமான அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டிய தேவை இருந்தது.
மக்களால் வெறுக்கப்படும் நாடாளுமன்றம் மக்களை ஆள்வதற்குத் தகுதியற்றது. ஆகவே, மக்களால் விமர்சிக்கப்படும் நாடாளுமன்றம் தோற்றம் பெற இடமளிக்க முடியாது.
நாடாளுமன்றம் மக்களுடன் நெருக்கமாகச் செயற்பட வேண்டும். சிறந்த அரச சேவையின் ஊடாகவே நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமாக அமையும் மக்கள் நலனுக்காகச் செயற்படும் சிறந்த அரச சேவையை நாட்டில் மீள உருவாக்க வேண்டும். அதற்கான ஆணையை அரச ஊழியர்கள் எமக்குப் பெரும்பான்மையாக வழங்கியுள்ளனர். அது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.
சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். ஜனாதிபதி உட்பட அனைவரும் நாட்டின் சட்டத்துக்கு அடிபணிய வேண்டும். சட்டம் தொடர்பில் வீழ்ச்சி கண்டுள்ள மக்களின் நம்பிக்கை மீள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அரசியல் பழிவாங்கலில் ஈடுபடும் நோக்கம் எமக்கில்லை. எது எவ்வாறாக இருப்பினும் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய குற்றங்கள் உள்ளன. அந்த விடயம் முறையாக விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்கப்படும்.
நியாயத்தை எதிர்பார்க்கும் மக்களின் ஆணையும் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ள மக்கள் ஆணைக்குள் உள்ளடங்கியுள்ளது.
குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும். சட்டம் நீதி உரியவாறு நடைமுறையாகும் ஆட்சி உருவாக்கப்படும். அந்த வகையில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படும்.” – என்றார்.