வாஷிங்டன் : அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள முன்னாள் அதிபர் டிரம்ப், தனி கட்சி தொடங்க இருப்பதாக வெளியான செய்திகள் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்விக்கு பிறகு தலைநகர் வாஷிங்டனில் முதன்முறையாக பொது மேடையில் பேசிய டொனால்டு டிரம்ப், மாற்றங்களை ஏற்படுத்துவதாக கூறி கொண்டு அதிபரின் கடமைகளை ஜோ பிடன் மீறி வருவதாக குற்றம் சாட்டினார்.
அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். 2024 அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி படு தோல்வியை சந்திக்கும் என்று கூறிய டிரம்ப், குடியரசு கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்க இருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று கூறியுள்ளார்.
தனிக்கட்சியை தொடங்கி அமெரிக்க மக்களின் வாக்குகளை பிரிக்கும் எண்ணம் எப்போதும் தனக்கு ஏற்பட்டது இல்லை என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.