வாஷிங்டன்: இந்தியாவில் இருந்து வருபவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா 2ம் அலை மிக தீவிரமாக பரவி வருவதால் இந்திய பயணிகள் விமானங்களுக்கு ஆஸ்திரேலியா, கனடா, கம்போடியா உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன.
தற்போது அமெரிக்காவும் இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கான பயண கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா மிக தீவிரமாக பரவி வருவதால் அங்கிருந்து வருபவர்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதிப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
இதற்கான அறிவிப்பாணையில் அதிபர் ஜோ பைடன் நேற்று கையெழுத்திட்டார். வரும் செவ்வாய்கிழமை முதல் இந்த தடை அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரின் ஆலோசனையை பெற்ற பின்னரே பயண கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
இதில் இந்தியர்கள் நலனும் அடங்கியிருப்பதாக கூறியுள்ள கமலா ஹாரிஸ், இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமெரிக்கா உதவும் என்று தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக ஆக்சிஜன் டேங்கர்கள் நிரப்பிய விமானம் அனுப்பி வைக்கப்படுவதாகவும் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.