ஐ.எஸ். தீவிரவாதிகள் பிரச்சினை மற்றும் வறுமை காரணமாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து கடந்த சில மாதங்களாக ஐரோப்பிய நாடுகளுக்கு அடைக்கலம் தேடிச் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதுவரை 5 லட்சம் அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்து உள்ளனர். அடுத்த 3 மாதங்களில் மேலும் 3 லட்சம் பேர் வரை அகதிகளாக ஐரோப்பாவுக்குள் நுழையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்கு பின்பு முதல்முறையாக இப்போதுதான் அகதிகள் பல்வேறு நாடுகளுக்கு செல்வது அதிகரித்து உள்ளது.
எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 28 நாடுகளில் அங்கேரி உள்ளிட்ட சில நாடுகள் அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதை விரும்பவில்லை. இதனால் தங்களது நாட்டில் பொருளாதார பிரச்சினை ஏற்படும் என்றும், அமைதி சீர்குலையலாம் எனவும் அவை அஞ்சுகின்றன.
இந்த நிலையில், நகரில் அகதிகளுக்கு தஞ்சம் அளிப்பது குறித்த பிரச்சினை குறித்து பேசுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உள்துறை மந்திரிகளின் கூட்டம் பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் அகதிகள் பிரச்சினையை சமாளிக்க நிதி ஒதுக்கீடு செய்வது மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் அகதிகளுக்கு அடைக்கலம் தருவதற்கு ஜோர்டான், எகிப்து நாடுகளின் உதவியை கோருவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
மேலும், ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ள 5 லட்சம் அகதிகளில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேரை வேறு இடங்களில் குடி அமர்த்துவது தொடர்பான ஒப்பந்தம் ஒன்றும் கூட்டத்தில் கையெழுத்தாகிறது. ஐரோப்பிய நாடுகள் தாங்களாகவே முன்வந்து அகதிகளை மறுகுடியமர்த்தும் வகையில் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது என்று ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் மார்டின் ஸ்சூல்ஸ் தெரிவித்தார்.
இதனிடையே, ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்கலும் அகதிகளை ஏற்றுக்கொள்வது குறித்து முதல்முறையாக வெளிப்படையாக கருத்து தெரிவித்து இருக்கிறார்.