அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையும், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தி வந்த குழந்தைகளுக்கான பாட்டுப்பயிலரங்கமான “சின்னஞ்சிறு குயில்கள்’ நிறைவுவிழா கோவையில் கடந்த டிசம்பர் 1 ஆம் திகதி நடைபெற்றது.
விண்ணப்பித்திருந்த 300 மாணவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 40 மாணவர்களுக்கு வருடகாலமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டது. நிகழ்வில் பேசிய அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத்த தலைவர் ஜனக மாயாதேவி கூறுகையில், “பல்வேறு சோதனைகள் மற்றும் தேர்வுகளின் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தற்போது 40 மாணவர்கள் இன்று மேடையேறி நிற்கின்றனர். இதற்காக மாணவர்களிடமிருந்து எவ்வித கட்டணமும் வாங்கப்படவில்லை. இந்தப் பயிலரங்கம் சிறப்பாக செயல்பட கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் முழு ஒத்துழைப்பையும் வழங்கினார்” என்று குறிப்பிட்டார்.
மேலும் இந்நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக தலைவர் எம்.கிருஷ்ணன் மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் தெற்கு மண்டல மைய இயக்குநர் முனைவர் எம்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் உரையாற்றினர்.
அதனைத்தொடர்ந்து “சின்னஞ்சிறு குயில்கள்” புத்தக வெளியீட்டில், அவினாசிலிங்கம் பெண்கள் கல்வி நிறுவனத்தின் பதிவாளர் டாக்டர் எஸ்.கௌசல்யா புத்தகத்தை வெளியிட முனைவர் எம்.பாலசுப்பிரமணியம் பெற்றுக்கொண்டார். அத்துடன் பயிற்சி பெற்ற குழந்தைகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.