ஆன்மிகத்தில் நாட்டமுடைய நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
ரஜினி பா.ஜ.க வில் இணைவது தொடர்பாக செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை ரஜினி பா.ஜ.க வில் இணைய வேண்டும் என தான் விரும்புவதாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ”ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலோ அல்லது பாஜகவில் சேர்ந்தாலோ தமிழகத்திற்கு எந்த நன்மையும் கிடையாது. ரஜினி கட்சி தொடங்க மாட்டார், பா.ஜ.கவிலும் இணைய மாட்டார். ஆன்மிகத்தில் நாட்டம் உடையவர்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள்” எனக் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த அரசியலுக்கு வருவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அவரது அதரவாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரஜினிகாந்த் கூறிய பிறகு இது குறித்த விவாதங்கள் அதிகரித்து வருகின்றன.
இருப்பினும் ரஜினிகாந்த் இதுவரை அரசியலுக்கு வருவது பற்றியோ, தான் தொடங்கப்போகும் கட்சி பற்றியோ எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. எனினும் அவரது அரசியல் பிரவேசம் பற்றி சில அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.