தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மாறினால் அதில் இணையத் தயார் என வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருப்பது நல்ல விடயமாகப்படுகிறது என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவரை உள்வாங்கும் போது பலமான சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகழும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ரெலோவின் தலைமைக் குழுக் கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “எதிர்வரும் பெப்ரவரி 8ஆம் திகதி எமது கட்சியின் 50ஆவது ஆண்டு விழாவை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம். அன்றைய தினம் கட்சியின் செயலாளர் நாயகத்தை தெரிவிசெய்யும் முடிவையும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழீழ விடுதலை இயக்கத்தின் வேட்பாளர்கள் யார் என்பதையும் நாம் தெரிவிக்கவுள்ளோம். எமது கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை நாம் மீள அழைக்கப் போவதில்லை. அவர்களுக்கு எமது கட்சியில் இடமில்லை.
இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மாறினால் அதில் இணையத் தயார் என முன்னாள் முதலமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்து என்னைப் பொறுத்தவரை நல்ல விடயமாகப்படுகிறது. இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பேசி அப்படி ஒரு மாற்றத்தை கொண்டுவருவதற்கான முயற்சியை செய்யலாமே தவிர இது ஒரு சாத்தியமான விடயம் என என்னால் கூறமுடியாது.
நாம் ஒற்றுமையாகச் செயற்பட்டு தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் வடக்கு கிழக்கிலே அதிக ஆசனங்களைப் பெற்று எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆணையை வலுவாகப் பெறமுடியும். எனவே அவரும் வெறும் பேச்சிலே கருத்துக்களைச் சொல்லக்கூடாது.
ஆனால் எமது மக்களின் இனப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்று வாயளவிலே சொல்லுகின்ற யாருமே எமது மக்களின் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. ஆகவே உளரீதியாக சிந்திக்கின்ற ஒவ்வொருவரும் இந்த விடயத்திலே ஒற்றுமை கொள்ளக்கூடிய வாய்ப்பை உருவாக்க வேண்டும். அவருடைய கூற்றினை நாம் சிந்திக்க வேண்டும். அவரை உள்வாங்கும் போது பலமான சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகழும். அந்த முயற்சியை ரெலோ செய்யும்” என அவர் தெரிவித்தார்.