டெல்லி: மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வை தள்ளிவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மருத்துவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். கொரோனா தாக்குதலின் 2வது அலை தீவிரமடைந்துள்ளதால் பி.ஜி நீட் தேர்வை தள்ளிவைக்க மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வரும் 18ம் தேதி மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் வாரியம் அறிவித்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வரும் நிலையில் நீட் தேர்வு நடத்துவது முறையற்றது. தற்போது நீட் தேர்வை நடத்தினால் ஆயிரக்கணக்கான உயிர்கள் அபாயத்தில் சிக்கும் நிலை ஏற்படும் என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போது கொரோனா அதிகரித்துள்ள சூழலில் பி.ஜி நீட் தேர்வை நடத்துவது நியாயமற்றது என்றும் மருத்துவர்கள் வாதமிட்டுள்ளார். பெரும்பான்மையான மருத்துவர்கள் இன்னும் 2வது டோஸ் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளவில்லை என தகவல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஜனவரி 5ல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பி.ஜி நீட் தேர்வு கொரோனாவால் ஏப்ரல் 18க்கு ஒத்திவைக்கப்பட்டது.
கொரோனா குறைவாக இருந்த போதே தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதிகரித்துள்ள சூழலில் நடத்துவது அராஜகமானது. கொரோனா பாதித்த தேர்வர்கள் பி.ஜி நீட் தேர்வை எழுதக்கூடாது என்ற விதிக்கும் மனுவில் மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.