March 31, 2023 8:28 am

வீதிகளில் மக்கள்! – அரசு மீது எதிரணி பாய்ச்சல்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“ரணில் தலைமையிலான அரசின் அராஜக ஆட்சியால் மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளார்கள். அவர்கள், பிரச்சினைக்குத் தீர்வு வேண்டி போராடுகின்றார்கள்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எங்களது கட்சி எம்.பிக்கள் யாரும் டீல் வைத்துக்கொள்ளவில்லை. ஜனாதிபதியின் அலுவலகத்துக்கு அருகே எங்களது எம்.பிக்கள் யாரும் போய் நிற்பதில்லை.

இந்த ஆட்சியாளர்களால் மக்கள் பிரச்சினைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள். இது அவர்களின் உரிமை.

நாடு வங்குரோத்து நிலையை அடைவதற்கு முன்பே நாம் சர்வதேச நாணய நிதியத்திடம் போகச் சொன்னோம். ஆனால், நாடு நல்லா சீரழிந்த பின்பே அங்கே போய் நிற்கின்றார்கள். அப்போதே போயிருந்தால் இப்போது மக்களின் கழுத்தை நெருக்கி சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கேட்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையால்தான் கழுத்தை நெரிக்கும் வகையில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. நட்டம் ஏற்படும் நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றி விற்பதே அந்த நிபந்தனை.

வரியைச் செலுத்தாத நிறுவனங்கள் எத்தனையோ உள்ளன. அந்த நிறுவனங்களிடமிருந்து வரியை அறவிடுவதற்கு உரிய நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அதைச் செய்யாமல் ஏழை மக்கள் மீது புதுப்புது வரிகளைச் சுமத்தி அவர்களிடம் இருந்து வரியை அறவிடும் முறைதான் இப்போது நடைமுறையில் உள்ளது.

ஒரு பக்கத்தில் உள்ளூர் உற்பத்திகள் வீழ்ச்சியடைந்துகொண்டு செல்கின்றன. அவற்றைத் தூக்கி நிமிர்த்துவதற்கு எந்த ஏற்பாடும் இல்லை.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் மீண்டும் நாடகமாக மாறியுள்ளது. தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி உறுதியாக நடக்கும் என்று சொல்லவில்லை. தேர்தல் நடத்துவதற்கான பொருத்தமான திகதி 25 என்றுதான் தேர்தல் ஆணையாளர் கூறியுள்ளார்.

தேர்தலுக்குப் பணம் தருவதாக நிதி அமைச்சு இன்னும் சொல்லவில்லை. தபால் மூல வாக்குச்சீட்டுக்களை அச்சடிப்பதற்கு மீண்டும் பணம் கேட்கின்றார்கள்” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்