துஷாபன் பத்மநாதன் போருக்குள் பிறந்து வளர்ந்தவர். போருக்குள் கல்வி கற்று தற்போது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வருகிறார். போரால் கைகளை இழந்த மக்களுக்காக செயற்கை கையினை உருவாக்கி பலரதும் பாராட்டை பெற்றுள்ள துசிபரன், ஈழத்தின், வன்னி நிலத்தின் நம்பிக்கை நட்சத்திரம். வளர்ந்து வரும் சாதனையாளன் வணக்கம் லண்டனுடன் பகிர்ந்து கொண்ட சில நிமிட நேர்காணல்.
உங்கள் குடும்பப் பின்னணி குறித்து கூறுங்கள்
சொந்த இடம் மல்லாவி. அப்பா ஆசிரியர் ,அம்மா வீட்டுப்பணி 3சகோதரிகள்.
போர்ச்சூழலில் உங்கள் கல்வி கற்கும் வாய்ப்புக்கள் சூழல்கள் எவ்வாறு அமைந்தன?
போர்ச்சூழல் காரணமாக பல பாடசாலைகளில் கல்வி கற்றிருக்கின்றோம் குறிப்பிட்ட காலம்வரை பாடசாலை செல்லக்கூடியமாதிரியே இருந்தது. ஆரம்பத்தில் இடப்பெயர்வுகளுடனும் பாடசாலைகள் இயங்கக்கூடியவாறே ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. மல்லாவி மத்திய கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்து பின்னர் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திலும் பின்னர் உடையார்கட்டு மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றேன் . பின்னர் வலயம் 4 அகதிகள் முகாமில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையில் கல்வியை தொடர்ந்தோம். அதன்பின் யாழ் பரியோவான் கல்லூரியிலும் பின்னர் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றேன்.
உங்கள் கண்டுபிடிப்பு குறித்து கூறுங்கள்?
கைகளை இழந்த மாற்றுவலுவுள்ளோருக்கான இயங்கக்கூடிய வகையில் செயற்கை கை. மேற்படி உருவாக்கத்திற்கான முயற்சி உயர்தர பரீட்சை முடிவடைந்த காலத்தில் இருந்து தொடங்கி பலகால முயற்சியின் பின் பலரின் உதவியுடனும் ஆதரவுடனும் தற்போது முழுமையாக வெற்றி பெற்றது.மேற்படி செயற்கை கையானது ஏற்கனவே அபிவிருத்தி அடைந்த பல நாடுகளில் உபயோகத்தில் இருந்தாலும் அதனை கொள்வனவு செய்வதற்கான செலவு போரால் பாதிக்கப்பட்டு மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வரும் மக்களுக்கு சாத்தியமற்றதாகவே உள்ளது. அதனால் மேற்படி உருவாக்கத்தை வேறு பிரதியீடுகளின் மூலம் குறைந்த செலவில் உருவாக்குவதற்கான முயற்சியே மேற்கொள்ளபட்டு பரிசோதிக்கப்பட்டு வெற்றி பெற்றது.
இந்த கண்டுபிடிப்புக்கு உங்களைத் தூண்டியது எது அல்லது உங்கள் கண்டுபிடிப்பின் பின்னணி என்ன?
மேற்படி உருவாக்கத்திற்கு எமது சமூகத்தில் உள்ள போர்காலத்தில் அங்கங்களை இழந்தவர்கள் அன்றாடம் சந்திக்கும் இன்னல்களை நேரில் கண்டவர்களில் நானும் ஒருவன் அதுவே இவ்வாக்க முயற்சிக்கு முக்கிய காரணமும் ஆகும்.
உங்களின் எதிர்கால கனவு என்ன எதிர்காலத் திட்டங்கள் என்ன?
மேற்படி செயற்கை கையின் இயங்கும் மாதிரியை சாதாரண அங்கவீனர்கள் உபயோகிக்கக் கூடிய வகையில் உற்பத்தி செய்து வழங்கும் போதே மேற்படி உருவாக்கம் முழுமைபெறும். அதன்படி இவ் உருவாக்கத்தினை எமது சமூகத்தில் உள்ள சாதாரண மக்கள் உபயோகிக்கக் கூடிய வகையில் உருவாக்கி வழங்குவதே எனது அடுத்த நோக்கமாகும்.
நேர்காணல் – வணக்கம் லண்டனுக்காக பூங்குன்றன்