தென் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வியாபாரம் செய்ய வந்த செட்டிமார், சுட்டதீவு துறைக்கு அருகே நெல் வேளாண்மை செய்யக் கூடிய நிலம் உள்ளது என்று அறிந்து, அங்கு வந்து கடல் நீர் உட்புகா வண்ணம் பெரிய வரம்புகளை அமைத்து விவசாயம் செய்தார்கள். செட்டிமார் அமைத்த அந்த வரம்புகள், அவர்கள் நெல் வேளாண்மை செய்ததற்குரிய சாட்சியாக இன்றும் உள்ளன. செட்டிமார் கடற்கரையில் ஒரு பிள்ளையார் கோவிலை அமைத்து வழிபட்டு வந்தார்கள். அவர்கள் இந்தியாவிற்கு திரும்ப வேண்டி வந்த போது யாவற்றையும் கைவிட்டு சென்றார்கள்.
பிள்ளையார் கோவிலுக்காக கட்டிய கொட்டில் சிதிலமடைந்து விட்டது. 1880 ஆம் ஆண்டளவில் திரு. முதலிச்சின்னர் என்பவரும் அவரது அண்ணன் தம்பிமாரும், மீன் பிடிக்க கச்சாய் துறையிலிருந்து தோணியில் புறப்பட்டார்கள். கடுமையாக வீசிய காற்றினால் அவர்களது தோணி சுட்டதீவு கரையை அடைந்தது. காற்றின் வேகம் குறைந்த போது அவர்களின் கண்களில் சிதிலமடைந்த கோவில் தென்பட்டது.
திரு. முதலிச்சின்னரும் அவரது அண்ணன் தம்பிகளும் கரையில் இறங்கி ஆராய்ந்த போது பிள்ளையாரைக் கண்டார்கள். தாங்கள் வணங்கும் பிள்ளையார் தான் தங்களை கரைக்கு அழைத்து வந்து, தனது நிலையை காண வைத்தார் என்பதை புரிந்து கொண்ட அவர்கள் கச்சாயிலிருந்து கிடுகு, பனைமரம் முதலியவற்றைப் கொண்டு வந்து கோவிலைப் புனரமைத்து கச்சாயிலிருந்து வந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், விளக்கு வைத்து, பூசை செய்து வழிபட்டு வந்தார்கள்.
அவர்களுக்கு பின்னர் அவர்களின் பிள்ளைகள் பூசை செய்தார்கள். பூசையை ஒழுங்காக செய்ய எண்ணிய திரு. சின்னர் முருகேசு, அவரின் தம்பிமுறையான திரு. பரமர் கந்தையா (சுழியர்), திரு. பரமர் கணபதிப்பிள்ளை (ஓணார்) என்பவர்கள் குஞ்சுப் பரந்தனுக்கு வடக்கு பகுதியில் செருக்கன் கிராமத்தின் அருகில் காணியை வெட்டி, நெல் வேளாண்மை செய்ய தொடங்கினார்கள்.
செருக்கனில் அவரது உறவினர்கள், பிடித்த மீன்களைக் காய வைத்து கருவாடு ஆக்குவதற்காகவும், நெல் வேளாண்மை செய்வதற்காகவும் முன்பே பூனகரியால் வந்து குடியேறி இருந்தனர். திரு. முருகேசரின் மறைவிற்கு பின்னர் அவரது மகன் செல்லத்துரை (1929 ஆம் ஆண்டில் பிறந்தவர்) முருகேசரின் தம்பி முறையினரான திரு. பரமர் கந்தையா, திரு. பரமர் கணபதிப்பிள்ளை, ஆகியோருடன் இருந்து வளர்ந்தார். சிறிய தந்தைமாருடன் வாழ்ந்த திரு. செல்லத்துரை அண்ணாவியார் உரிய வயது வந்தபின்னர் சிறிய தந்தைமாருடன் சேர்ந்து பூசை செய்து வந்தார்.
ஆனி மாதம் பொங்கல் பக்தர்கள் சூழ சிறப்பாக நடை பெறுவது இன்று வரை வழக்கமாக உள்ளது. செட்டிமார் தொடங்கிய கோவில் என்பதால் வாரிச்செட்டி மடம் பிள்ளையார் என்று கோவிலை அழைப்பதாக, திரு. செல்லத்துரை அண்ணாவியார் கோவில் வரலாறு பற்றி கேட்ட போது கூறினார்.
கணபதி, மீனாட்சியின் இல்லற வாழ்வு மிக மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. விசாலாட்சியின் தம்பிமார் வயல் வேலை சம்பந்தமாக தியாகர் வயலுக்கு வந்து ஆறுமுகத்தாருடன் மட்டும் நின்றபடி கதைத்து விட்டு சென்று விடுவார்கள்.
தனது மாமியாருடன் அவர்கள் கதைக்காமல் சென்றதை அவதானித்த மீனாட்சி, அடுத்தமுறை அவர்கள் வந்து நின்று கதைத்த பொழுது அவர்களிடம் “பெரிய மாமா, சின்ன மாமா, ஏன் நின்று கதைக்கிறியள். உள்ளே வந்திருந்து கதையுங்கோ, நான் தேத்தண்ணி போடுறன், குடிச்சிட்டு போகலாம்” என்று உரிமையுடன் கூறி விட்டு, தேநீரும் கொண்டு வந்து விட்டாள்.
அவர்கள் மறுக்க முடியாமல் மீனாட்சி விரித்த பாயில் இருந்து தேநீரைக் குடித்தார்கள். விசாலாட்சி ஒரு புன்சிரிப்புடன் மருமகளின் செய்கையை பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்கள் போகும் போது மீனாட்சியைப் பார்த்து “பிள்ளை, தேத்தண்ணி நல்லாயிருந்தது” என்று கூறி விட்டு, விசாலாட்சியிடம் வந்து தயங்கி தயங்கி “அக்கா, போட்டு வாறம்” என்று சொல்லிச் சென்றார்கள். ஆறுமுகத்தார் விசாலாட்சியை பார்த்து சிரித்தார். அவர்களிருவருக்கும் பெரிய நிம்மதியாக இருந்தது.
கணபதி மனதில் சந்தோசமாக இருந்தாலும் மீனாட்சியிடம் “உனக்கு என்னை விட உன்ரை மாமா, மாமி, மச்சாள், மச்சானில் தான் பாசம் கூட. நீ என்னைப்பற்றி யோசிக்கிறேல்லை” என்று வேணும் என்று வம்புக்கிழுப்பான். அதற்கு அவள் “உங்களுக்கு நான் என்ன குறை வச்சனான்” என்று பதிலுக்கு சிணுங்குவாள்.
கணபதி உடனே “மீனாட்சி நான் சும்மா தான் சொன்னனான்.” என்று சமாளிப்பான். கணபதி, தன்ரை ஐயா எப்பிடி தனக்கு வேலைகளை பழக்கினாரோ, அதே மாதிரி, கந்தையனை கூட்டிச் சென்று தன்னுடன் சேர்ந்து வேலைகளை செய்ய பழக்கினான்.
மீனாட்சி மாமியாருடன் பிள்ளையார் கோவிலுக்கும், காளி கோவிலுக்கும் இயலுமான எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் போவாள். முத்தர்கணபதி சொல்லும் கதைகளை கேட்கவும் மீனாட்சியும் போவாள். மீனாட்சி வந்த பின்னர் கோவிலில் கதை கேட்கும் பெண்கள் தொகை கூடியது. அவர்கள் வராவிட்டாலும் மீனாட்சி அவர்களின் வீட்டிற்கு போய் கூட்டி வந்து விடுவாள். அவளுக்கு அனேகமான கதைகள் தெரிந்திருந்தன.
முத்தர்கணபதியிடம் அவள் கேட்கும் கேள்விளால் அவன் திக்குமுக்காடிப் போவதும் உண்டு. முத்தர்கணபதி தனக்கு நன்கு தெரிந்தாலும், மீண்டும் ஒருமுறை புத்தகத்தை வாசித்து விட்டு தான் வருவான். மகாபாரத கதை சொல்லும் போது, துரோணர் அரசகுமாரன்களுக்கு வில்வித்தை பழக்கும் போது தூர நின்று பார்த்த வேடர் குலத்தைச் சேர்ந்த ஏகலைவன், அருச்சுனரை போல சிறந்த வில் வீரனாக இருப்பதைக் கண்டு, அவனது வலது கை பெருவிரலை குரு தட்சணையாக கேட்ட இழிவான செயலைப் பற்றி அவள் கேட்கும் போது, தனது வாத்தியார் சொன்ன பதிலைக் கூறினாலும், முத்தர்கணபதிக்கும் துரோணர் செய்தது பிழையாகவே தோன்றும். கணபதியிடம் “எனக்கு நல்லாய் தெரிந்த கதைகளையும், மீனாட்சி அக்கா வரத் தொடங்கிய பிறகு வாசித்து விட்டுத் தான் வாறனான். எனக்கும் திருப்பி திருப்பி வாசிக்க புதுப்புது விசயங்கள் தெரியுது.” என்று சொல்லுவான்.
“நீங்கள் பள்ளிக்கூடம், பள்ளிக்கூடம் என்று அதே யோசனையில் திரியிறியள். என்னை ஒரு இடமும் கூட்டிக்கொண்டு போறேல்லை.” என்று மீனாட்சி வம்புக்காக, ஒரு நாள் குறைபட்டுக் கொண்டவள் போல நடித்தாள்.
அதற்கு கணபதி “மீனாட்சி, நானும் கந்தையனும் படிப்பை நிப்பாட்டினது பள்ளிக்கூடம் இல்லாதபடியால் தான். என்ரை ஐயா தன்ரை அனுபவப் பாடங்களை எனக்கு சொல்லித் தந்தவர். அதாலை நான் நல்லாய் இருக்கிறன். அவரை மாதிரி எல்லாரும் இல்லைத் தானே. என்ரை தங்கச்சி பள்ளிக்கூடம் போகாமல் இருக்கிறாள். பேரம்பலமும் படிக்க வேணும். என்ரை தம்பி, தங்கச்சி மட்டுமில்லை, செருக்கனிலையும் பெரிய பரந்தனிலையும் படிக்காமல் கன பிள்ளைகள் இருக்கினம். பள்ளிக்கூடம் ஒன்று வந்தால் நல்லது தானே.” என்றவன், அடுத்த வெள்ளிக்கிழமை சுட்டதீவு பிள்ளையார் கோவிலுக்கு போவதற்கு ஒழுங்குகள் செய்து விட்டான்.
மீனாட்சி கண்டி வீதியால் வந்தபடியால் சுட்டதீவு கோயிலுக்கு போனதில்லை. மாமியாரும் கணபதியும் மீசாலையால் தோணியில் வந்து இறங்கியதும், சுட்டதீவுக் கோவிலில் கும்பிட்டதை மீனாட்சி அறிந்திருந்தாள். அவள் சொல்லாவிட்டாலும் அங்கு போக அவள் விரும்புறாள் என்பது கணபதிக்கு தெரியும்.
ஆறுமுகத்தார், விசாலாட்சி, முத்தர், அவரின் மனைவி, முத்தர்கணபதி, பொன்னாத்தை, பொன்னாத்தையின் கணவனும் மகனும், கணபதி, மீனாட்சி, கணபதியின் தோழர்கள் எல்லோரும் பொங்கல் பானை, பொங்குவதற்குரிய சாமான்கள் எல்லாவற்றையும் மூன்று வண்டில்களில் ஏற்றி கொண்டு காட்டு வழியால் போனார்கள்.
காட்டு வழியால் போகும் போது கணபதி முதல் முதல் வந்த போது பார்த்த காட்சிகள் எல்லாவற்றையும் மீனாட்சியும் பார்த்தாள்.
கணபதியிடம் “எனக்கு ஒரு மான் குட்டியும் ஒரு மயில் குஞ்சும் பிடித்து தாருங்கோ. நான் கவனமாக வளர்ப்பன்.” என்று கேட்டாள். அதற்கு கணபதி “எங்கடை ஆட்கள் எல்லாத்தையும் வளர்த்து பாத்திட்டினம். மான் குட்டிகள் சில நாட்கள் வளருவினம். ஆனால் தங்கடை கூட்டத்தை விட்டு பிரிந்த ஏக்கத்தை மறக்கமாட்டினம். அந்த ஏக்கத்திலேயே செத்து போவினம்.
மயில் முட்டைகளைக் கொண்டு வந்து கோழிகளில் அடைவைப்பினம். பொரித்த மயில் குஞ்சுகள் கொஞ்ச நாள் கோழியையே தாயென்று நம்பி வளருவினம். வளர்ந்த பின்னர் மயில் கூட்டத்தைக் கண்டதும் அவையோடை பறந்து போய் விடுவினம். குழு மாடுகள் மட்டும் பட்டி மாடுகளோடை சேர்ந்து வாழ பழகிவிடுவினம். அதனால் மான், மயில்களை காட்டிலேயே வளர விடுவது தான் சரி.” என்றான்.
அடர்ந்த காட்டினூடாக போன வண்டில்கள், இப்போது தாழை, கள்ளி, நாகதாளி, குடல்வேல், கற்றாழை முதலிய தாவரங்கள் இருந்த பற்றைக் காடுகளினூடாக சென்றன. தாழம்பூக்கள் வாசனை வீசின. மீனாட்சி அவற்றிற்கு ஆசைப்பட்டாள். தாழம்பூ வாசனைக்கு நாகபாம்புகள் வந்து இருக்கும், அதனால் மற்றவர்களை வண்டிலால் இறங்க விடாமல், கணபதி தான் இறங்கி மிகவும் கவனமாக அவற்றைப் பிடுங்கி மீனாட்சி, கந்தையன், சின்னமீனாட்சி, தன்ரை அம்மா எல்லாருக்கும் கொடுத்தான். மீனாட்சி தாழம்பூக்களை முகர்ந்து பார்த்துவிட்டு “அருமையான வாசம்” என்றாள்.
மேலும் சென்ற போது பார்த்த நாகதாளிகளில் சென்னிறமான பழங்கள் காணப்பட்டன. நாகதாளி பழங்கள் மிகவும் சுவையானவை, அவற்றைப் பிடுங்குவதற்கு முட்கள் தடையாக இருந்தன. குரங்கு ஒன்று ஒரு வளர்ந்த மரத்தின் கிளையை வாலால் சுற்றி பிடித்தபடி, பின் கால்களாலும் அந்த கிளையை பற்றிக் கொண்டு தலை கீழாக தொங்கியவாறு முன் கால்களால் நாகதாளி பழத்தை பிடுங்கி சாப்பிட்டது.
அதை பார்த்த மீனாட்சியும், சின்னமீனாட்சியும், கந்தையனும் கை தட்டி சிரித்தார்கள். பற்றைக் காடுகள் முடிய வெள்ளை மணல்கள் தோன்றின. மணற்பரப்பின் நடுவே பிள்ளையார் கோவில் இருந்தது. பூசாரியார் அவர்களை வரவேற்றார். எல்லோரும் மகிழ்ச்சியாக பொங்கினார்கள். பூசாரியார் அவற்றை சாமிக்கு படைத்து, தீபம் காட்டி, பூசை செய்ய எல்லோரும் கும்பிட்டார்கள். பூசாரியார் கொடுத்த திருநீற்றை பூசி, சந்தனப்பொட்டு வைத்து, அவர் கொடுத்த பிரசாதங்களை வாங்கி கொண்டார்கள்.
மீனாட்சி, மாமியாரும் கணபதியும் முதல் முதல் வந்து இறங்கிய துறைமுகத்தை பார்க்க விரும்பினாள். பெரியவர்களை கோவிலில் ஆறுதலாக இருக்க விட்டு விட்டு, மற்றவர்கள் நடந்து கடற்கரையை அடைந்தார்கள்.
துறைமுகத்தில் கரையில் நட்டிருந்த மரக்கட்டைகளில் கயிறுகளால் கட்டப்பட்ட தோணிகள் சில கடல் அலைகளினால் ஆடிக் கொண்டிருந்தன. தோணிகளின் மேல் ஆலா பறவைகள் வந்து, இருந்து சிறகை விரித்து கொத்தியபடி இருந்தன.
கடற்கரையில் முத்தர்கணபதி சின்னமீனாட்சிக்கும் கந்தையனுக்கும் மணல் வீடு கட்டி பழக்கி கொண்டிருந்தான். கணபதி பேரம்பலத்தை தோளில் வைத்த படி, மீனாட்சியுடன் கடலுக்குள் இறங்கி முழங்கால் அளவு தூரத்திற்கு நடந்து சென்றான். மீனாட்சி ஒரு கையால் சேலையை உயர்த்தி பிடித்தபடி மறு கையால் கணபதியின் தோளை பிடித்து கொண்டு சேர்ந்து நடந்தாள்.
மீன் குஞ்சுகள் அவள் காலைக் கடித்தன, அவள் கூச்சத்தினால் சிரித்து கத்தியபடி துள்ளி குதித்தாள். அவளுக்கு எல்லாமே புதிய அனுபவங்களாக இருந்தன.
அடுத்த நாள் கணபதி முதல் வேலையாக இரண்டு இரண்டு பொச்சுமட்டைகளை ஒன்றாக இணைத்து கூடுகள் போல கட்டி, வீட்டின் பல பகுதிகளில் மழைத் தூவானம் படாத இடத்தில் தொங்க விட்டான். இரண்டு மூன்று நாட்களில் அடைக்கலம் தேடுவதைப் போல, சிட்டு குருவிகள் வந்து குடியேறி விட்டன. ஆண்குருவிகள் பெரியதாகவும் முகத்தில் கரும் அடையாளத்தோடும் இருந்தன. பெண்குருவிகள் சிறிதாகவும் அழகானவையாகவும் இருந்தன.
மீனாட்சி காலமையும் மின்னேரமும் அவற்றிற்கு அரிசிக் குருணிகளை போட்டு, அவை தமது சிறிய சொண்டுகளால் கொத்தித் தின்னும் அழகை பார்த்து இரசிப்பாள். அவற்றை ‘சிட்டுக்குருவிகள்’ என்று அழைக்காமல் ‘அடைக்கலம் குருவிகள்’ என்றே அழைப்பாள். அவள் சிட்டு குருவிகளுடன் கதைப்பதைப் பார்த்த கணபதி “மீனாட்சி, உன்னை பார்க்கவும் சிட்டு குருவி மாதிரி தான் இருக்கு.” என்று சொல்லி சிரித்தான்.
சில மாதங்களின் பின்னர் முருகேசர் பிள்ளைகளை பார்க்க வந்தார். வரும் போது வண்டிலில் தேங்காய்களும் தேங்காய் எண்ணையும் கொண்டு வந்தார். முகத்தில் தாடியுடன் கொஞ்சம் சோர்வாக காணப்பட்டார்.
கந்தையன் ஓடிப் போய் “ஐயா” என்று கட்டிப் பிடித்தவன் “நான் எருதுகளை அவிட்டுக் கட்டுவன், நீங்கள் உள்ளுக்க போங்கோ” என்று சொல்லி விட்டு சாமான்களை இறக்கி வைத்து விட்டு, வண்டிலை நிழலில் நிறுத்தி, எருதுகளை அவிட்டு கொண்டு போய் வாய்க்கால் கரையில் கட்டினான். பளையில் புற்களை தேடித் தேடி மேய்ஞ்ச எருதுகள், வன்னியின் பசுமையான புற்களை கண்டதும் காணாததை கண்டது மாதிரி ‘அவக்’,’அவக்’ என்று மேய்ந்தன.
முருகேசரை ஆறுமுகத்தார், விசாலாட்சி, கணபதி எல்லோரும் முகம் மலர்ந்து வரவேற்றார்கள். வந்தாரை வாழ வைக்கும் வன்னி அல்லவா? வந்தவர் சம்பந்தியும் கூட. மீனாட்சி தேநீர் ஆற்றி வந்து கொடுத்தாள்.
தகப்பனை அந்த கோலத்தில் பார்க்க வந்த அழுகையை அவள் அடக்கி கொண்டாள். “என்ன ஐயா உங்கடை கோலம்” என்றவளுக்கு அவளை அறியாமலே கண்ணீர் வந்தது. முருகேசர் “எனக்கு என்ன குறை அம்மா. நான் நல்லாய் தானே இருக்கிறன்” என்றார்.
ஆறுமுகத்தார் “வராதவர் வந்திருக்கிறீங்கள். ஒரு கிழமையாவது இஞ்சை எங்களோடை நின்று விட்டு தான் போக வேணும்” என்று மறித்து விட்டார். மீனாட்சியை சைவ கறிகளுடன் சமைக்க சொல்லிய ஆறுமுகத்தார், மரை வத்தல் கறியை தானே காய்ச்சினார். எப்பவேனும் கள்ளு குடிக்கும் ஆறுமுகத்தார் அன்று முருகேசருக்காக ஒரு முட்டி பனம் கள்ளும் எடுப்பித்து விட்டார்.
சமையல் முடியும் மட்டும் சம்பந்திகள் இருவரும் ஒரு பூவரசமர நிழலில் இருந்து கதை பேசி கள்ளு குடித்தார்கள். நீண்ட நாட்களின் பின்னர் மகளின் சமையலையும் மரை வத்தல் கறியையும் நன்கு சுவைத்து சாப்பிட்ட முருகேசர், பின்னர் தலைவாசலில் மீனாட்சி விரித்த பாயில், தலைக்கு அணையாக அவள் மடித்து வைத்த சாக்கில் தலை வைத்தபடி நிம்மதியாக பொழுது சாயும் வரை நித்திரை கொண்டார்.
முருகேசர், வீட்டிற்கு கட்டுவதற்கு ஒரு நாலு முழ வேட்டியையும், ஒரு மாற்று வேட்டியையும் மட்டும் கொண்டு வந்திருந்தார். அவை ஒரு கிழமையென்ன ஒரு மாதம் நின்றாலும் அவருக்கு போதும். கட்டிய வேட்டியையும் நாலு முழத்தையும் குளிக்க முன்னம், சால்வையை கட்டி கொண்டு தோய்த்து காய வைத்து விடுவார். குளித்தாப்பிறகு நாலு முழத்தை கட்டிக் கொண்டு சால்வையை அலம்பிவிடுவார். அந்த கால ஆண்கள் இவ்வாறு, தாமே தங்கள் உடுப்புக்களை தோய்த்துக் கொள்ளுவார்கள். தங்கள் மனைவி, மகள் தோய்க்க வேணும் என்று நினைப்பதில்லை.
“நீங்கள் இஞ்சை கனநாள் நின்றால் தோட்டத்துக்கு தண்ணீர் இறைக்கிறது ஆர்” என்று மீனாட்சி கேட்டாள். அதற்கு அவர் “மீனாட்சி, நீயும் கந்தையனும் இருக்கேக்கை நீங்கள் பார்த்து கொள்ளுவீங்கள். நான் இறைக்காமல் வேலை என்று போனால் நீங்கள் இறைப்பீங்கள். ஆடு, மாடு வராமல் பாப்பீங்கள். நாங்கள் ஒரு நாளும் மரக்கறி வாங்கிறேல்லை. இந்த முறையும் நல்ல தோட்டம். ஒரு நாள் நான் தேங்காய் கொண்டு சந்தைக்கு போக, மாடுகள் வந்து எல்லாத்தையும் திண்டிட்டு போட்டுதுகள்.” என்றவர், “நீங்கள் நெடுக எனக்கு காவலிருக்கேலுமே. சிறகு முளைத்தால் பறக்கத்தானே வேணும்.” என்றார்.
தொடர்ந்து “பிள்ளை, எங்கடை முத்தத்து மாவிலை இந்த முறை நிறை காய். முற்றினாப் பிறகு பிடுங்கிக் கொண்டு உங்களிட்டை வரலாமென்று தான் இருந்தனான். அதையும் போன கிழமை குரங்குகள் வந்து, புடுங்கி நாசமாக்கியிட்டுதுகள்.” என்றார். தகப்பனாரின் கஷ்டங்களை கேட்க மீனாட்சிக்கு சரியான கவலையாய் போய் விட்டது.
கந்தையன் தகப்பனை காட்டில் இருந்த தங்களின் காலைக்கு கூட்டிக் கொண்டு போய் காட்டினான். “ஐயா, எனக்கு இப்ப பசுக்களிலை பால் கறக்க தெரியும்” என்றான். தான் அத்தானுடன் போய் எல்லா வேலையும் பழகுவதைச் சொன்னான்.
கந்தையன் “ஐயா, உங்களுக்கொண்டு தெரியுமே. எங்கடை அத்தானுக்கு கோபமே வராது. எல்லாத்துக்கும் வாய்க்குள்ளை ஒரு சிரிப்பு தான். எங்களை எண்டில்லை ஒருத்தரையும் கோபிக்க மாட்டார்.” என்றான்.
மகளும் மகனும் சந்தோசமாய் இருக்கிறதை கேட்ட முருகேசருக்கு பெரிய நிம்மதியாய் இருந்தது. ஆறுமுகத்தாருடன் எல்லா இடங்களுக்கும் போய் வந்தது, தனது மருமகனை ஊர் சனம் எல்லாரும் மதிப்பாக கதைத்தது, கந்தையனோடை ஊர் சுத்திப் பார்த்தது, ஒவ்வொரு நாளும் விதம் விதமாய் சாப்பிட்டது என்று எப்படி ஒரு கிழமை போய்ச்செண்டு முருகேசருக்கு தெரியவில்லை. சிகையலங்கரிப்பவர் ஏதோ நெடுக பழகியவர் போல முருகேசரை கூப்பிட்டு இருத்தி தலை மயிரை வெட்டி, முகம் வழித்து விட்டது முருகேசருக்கு வியப்பாய் இருந்தது.
இப்போது அவர் முகத்தில் களை வந்திருப்பதை பார்த்து மீனாட்சி நிம்மதியடைந்தாள். அவர் போக வெளிக்கிட கணபதி கைக்குத்தரிசியை கொண்டு வந்து வண்டிலில் ஏற்ற, ஆறுமுகத்தார் மரை வத்தலை ஒரு உமலில் (பனையோலையால் இழைத்த பை) கொண்டு வந்து கொடுக்க, விசாலாட்சி நெய்யும், தேனும் கொண்டு வந்து கொடுத்தாள்.
கந்தையன் எருதுகளை வண்டிலில் பூட்டி விட முருகேசர் எல்லோருக்கும் சொல்லி வெளிக்கிட்டார்.
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சி ஓடிப் போய் “ஐயா” என்று அழுதபடி தகப்பனை அணைத்துக் கொண்டு அவரின் தோளில் சாய்ந்தாள்.
“அழாதை மீனாட்சி. நான் எங்கை தூரவே போறன், உதிலை பளை தானே. நினைத்தவுடன் வந்து விடலாம்” என்று முதுகில் தட்டிக் கொடுத்தார். முருகேசர் வண்டிலில் ஏறி எல்லோருக்கும் சொல்லி விட்டு எருதுகளை ஓட விட்டார்.
மீனாட்சி சத்தமாய் “ஐயா, ஒழுங்காய் சமைத்துச் சாப்பிடுங்கோ” என்றவள் வண்டில் மறையும் வரை கண்களை கண்ணீர் மறைக்க பார்த்து கொண்டு நின்றாள்.
.
தொடரும்..
.
.
.
மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்
.
ஓவியம் : இந்து பரா – கனடா
.
முன்னைய பகுதிகள்:
பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/
பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/
பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/
பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/
பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/
பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/
பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/
பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/
பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/
பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/
பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/
பகுதி 12 – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/
பகுதி 13 – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/
பகுதி 14 – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/
பகுதி 15 – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/
பகுதி 16 – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/
பகுதி 17 – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/
பகுதி 18 – https://vanakkamlondon.com/stories/special-topics/2021/01/97412/
பகுதி 19 – https://vanakkamlondon.com/stories/2021/01/98425/
பகுதி 20 – https://vanakkamlondon.com/stories/2021/01/99151/
பகுதி 21 – https://vanakkamlondon.com/stories/2021/01/99913/