செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 20 | பத்மநாபன் மகாலிங்கம்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 20 | பத்மநாபன் மகாலிங்கம்

14 minutes read

இலங்கையில் ஆதியில் இயக்கர், நாகர், வேடர் வாழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது. விஜயனும் தோழர்களும் வந்த வரலாறும் உண்டு. மகிந்தரும் சங்கமித்தையும் வெள்ளரசு மரக்கிளையை கொண்டு வந்திருக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து சேர, சோழ, பாண்டியர்கள் படையெடுத்து வந்த கதைகளும் உண்டு. இலங்கை அரசர்கள் திருமணத்திற்காக பாண்டிய அரச குடும்பங்களிலிருந்தும், நாயக்கர்கள் குலத்திலிருந்தும் பெண் எடுத்ததாகவும் கதைகள் உள்ளன. அராபியர்களும் வியாபாரத்திற்காக வந்துள்ளனர். ஐரோப்பியரும் வந்துள்ளனர். இவை இலங்கை மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, உலக தொடர்பு முதலியவற்றில் தாக்கங்களை ஏற்படுத்தின.

போர்த்துக்கீசர் காலம்…..கி.பி 1505—>1658.

டச்சுக்கார்ர் காலம்……..கி.பி 1640—>1796.

ஆங்கிலேயர் காலம்………கி.பி 1797—>1948.

போர்த்துக்கீசர் இருக்கும் போதே டச்சுக்கார்ர்கள் வேறொரு பகுதியில் இறங்கி விட்டனர்.

றெயில்வே றோட்டுக்கள்,

காங்கேசன்துறை வரை கி.பி 1905 இலும்

தலை மன்னார் வரை கி.பி 1914 இலும்

மட்டக்களப்பு   வரை கி.பி. 1928 இலும.

திருகோணமலை வரை கி.பி 1928 இலும்

கண்டி வரை கி.பி 1867 இலும் போடப்பட்டன.

நான்கு சில்லுகளில் ஓடக்கூடிய பாவனைக்குரிய கார்கள்,

ஜேர்மனியில் கி.பி 1885 இலும்

அமெரிக்காவில்    கி.பி 1890 இலும்

இங்கிலாந்தில்     கி.பி 1892 இலும்

தயாரிக்கப்பட்டு பாவனைக்கு விடப்பட்டன.

மாமன்மாரும் உறவினரும் தனது திருமணத்தைப் பற்றி தாயாருடன் கதைத்ததை அறியாத கணபதி அடுத்த நாள் தான் மீசாலையால் திரும்பியிருந்தான். வழமை போல குளித்து விட்டு வந்து தம்பி, தங்கையுடன் விளையாடி, மத்தியானம் சாப்பிடும் வரை விசாலாட்சி ஒன்றும் கதைக்கவில்லை.

இந்த முறை போகும் போதும் வரும் போதும் மீனாட்சியுடன் கதைக்க முடியவில்லை. அவளைப் பார்த்து சிரித்து தலையாட்டி விட்டு வந்தது கணபதிக்கு போதுமாயிருந்தது. அந்த நினைப்புடன் பிள்ளைகளுடன் மகிழ்வாக விளையாடிக் கொண்டிருந்த கணபதி, தாயார் வந்து அருகில் இருந்ததை கவனிக்கவில்லை. விசாலாட்சி தோளில் கையைப் போட்டு அணைத்தபடி “கணபதி” என்றதும் தான் சுய நினைவிற்கு வந்து “என்ன அம்மா” என்று கேட்டான்.

விசாலாட்சி, “கணபதி, நீயே விரும்பும் அளவிற்கு மீனாட்சி நல்லவளா? உனக்கு ஒரு நல்ல பெண்ணை கட்டி வைக்க வேண்டும் என்று நெடுக நான் காளியாச்சியை கும்பிட்டபடி தான். தம்பையரின் பகுதியில் செய்தால் சொந்தம் கெடாது என்று நினைத்தனான் தான். ஆனால் உன்ரை மனதிற்கு பிடிக்காத பெண்ணை செய்யச் சொல்ல மாட்டன். உன்ரை மனதுக்கு பிடித்தவள் கட்டாயம் நல்லவளாய் தான் இருப்பாள். உன்ரை கொப்பர் தான் நீ மீனாட்சியை செய்ய வேண்டும் என்று என்னட்டை கேட்டவர். முத்தருக்கும் நல்ல விருப்பம். இரண்டு பேரும் நல்ல நாள் பார்த்து முருகேசரிட்டை போய் கதைக்க போயினம்.” என்றாள்.

தாயார் சம்மதம் சொன்னதும் கணபதியின் நெஞ்சை அதுவரை அடைத்துக் கொண்டிருந்த பாரம் விலகியது போல இருந்தது. கணபதி தாயாரின் கைகளிரண்டையும் தனது கைகளால் பற்றிக் கொண்டு “அம்மா” என்றான். அவனுக்கு மகிழ்ச்சியில் வேறு வார்த்தைகள் வரவில்லை, ஆறுதலான பெருமூச்சு மட்டும் வெளிப்பட்டது. மகிழ்ச்சியில் மீனாட்சியிடம் உடனே போய் சொல்ல வேண்டும் என்னும் எண்ணமும் எழுந்தது. அதே நேரம் தாயார் “மீனாட்சி நல்ல பெண்ணாய் தான் இருப்பாள்” என்று சொன்னதை கேட்ட கணபதி ‘பொல்லாத வாய்க்காரி’ என்று நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.

மீசாலையிலிந்த வைத்தியர் குடும்பத்திலிருந்து வந்த ஒரு இளைஞன் பெரிய பரந்தனில் காடு வெட்டி, தனது காணியின் கொல்லனாற்றங் கரையில் ஒரு வைரவர் கோவிலை உருவாக்கியிருந்தார். பின்னர் ஏனோ அவர் தனது காணியில் கட்டை பிடுங்கி வயல் செய்யவில்லை.

வருடம் தோறும் ஒரு முறை வந்து வைரவருக்கு பொங்கல் வைத்துவிட்டு செல்வார். இப்போது அவர் ஓரளவு வைத்தியத்தில் திறமை பெற்று விட்டார். கணபதி தனது தோழர்களுடன் மீசாலை செல்லும் ஒவ்வொரு முறையும் அவருடன் போய் கதைப்பது வழக்கம். அவருடைய உறவினர்களும் மீசாலையில் வைத்தியத் தொழிலையே செய்தனர்.

பெரிய பரந்தனில் மக்களும் நிறைய வந்து விட்டனர். குஞ்சுப் பரந்தனிலும் செருக்கனிலும் வைத்தியர் இல்லை. எல்லோரும் கை வைத்தியம் செய்து, மாறாத போது வைத்தியத்திற்கு மீசாலைக்கு போய் வரும் நிலமை. கணபதி அவரிடம், “அண்ணை, நீங்கள் எங்கள் ஊருக்கு வந்தால் நாங்கள் எல்லா உதவிகளும் செய்வோம். நீங்கள் மூன்று கிராம மக்களுக்கும் வைத்தியம் செய்யலாம்.” என்று கூறுவான்.

வைத்தியரும் பெரிய பரந்தன் வந்து வயலை திருத்த தொடங்கினார். தாங்கள் அவருக்கு கூறியவாறு கணபதியும் தோழர்களும் அவர் வீடு போடுவதற்கும், வீட்டு வளவை சுற்றி காட்டில் வெட்டி எடுத்து வந்த அலம்பல்களால் அழகான வேலி அமைப்பதற்கும் உதவி செய்தனர்.

வைத்தியர் தனது காணியில் தூதுவளை, பிரண்டை, மோசுமொசுக்கை, முசுட்டை, குறிஞ்சா, முடக்கொத்தான், சிறு குறிஞ்சா, கொவ்வை முதலிய கொடிகளையும் துளசி, கீழ்க்காய்நெல்லி என்று ஏதேதோ மூலிகைச் செடிகளையும் மாதுளை, தோடை, எலுமிச்சை, செவ்விளநீர் மரங்களையும் சிறிது காலத்திலேயே வளர்த்து ஒரு மூலிகை தோட்டம் உருவாக்கி விட்டார். இப்போது எல்லோரும் அவரிடமே வைத்தியம் பார்க்கிறார்கள்.

ஒரு புதன் கிழமை காலமை ஆறுமுகத்தாரும் முத்தரும் பளைக்கு போக ஆயத்தமாகினர். கணபதி வண்டிலில் எருதுகளைப் பூட்டினான். தங்கை மீனாட்சி தானும் வரப்போவதாக வண்டிலில் ஏறி விட்டாள். தூரத்தில் முத்தர்கணபதி ஓடி வருவது தெரிந்தது. முத்தர்கணபதி “நல்ல காரியத்திற்கு செல்லும் போது நான்கு பேர் போக கூடாது என்று என்ரை வாத்தியார் சொல்லுறவர். என்னையும் சேர்த்தால் ஐந்து பேர்.” என்றான்.

பத்து மணியளவில் முருகேசர் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். எல்லோரும் வீட்டு திண்ணையில் விரித்த பாய்களின் மேல் இருந்தனர். கந்தையன் வந்து முத்தர்கணபதியுடனும் தங்கையுடனும் கதைத்துக் கொண்டிருந்தான். முருகேசர் எல்லோருக்கும் இளநீர் வெட்டி குடிக்க கொடுத்தார். மீனாட்சி கதவு மறைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். இளநீர் குடித்து முடிந்ததும் பெரியவர்கள் மூவரும் பின் வளவில் சென்று, முருகேசரின் தோட்டத்தைப் பார்த்தபடி கதைத்தனர்.  

கணபதிக்கு மீனாட்சியை கலியாணம் செய்வதைப் பற்றி முத்தர் கதையை தொடங்கினார். முருகேசர் “எனக்கும் அவர்களின் விசயம் தெரியும். கணபதி நல்ல குடும்பத்து பிள்ளை, எல்லை மீற மாட்டான், மீனாட்சியும் தன்ரை நிலையிலிருந்து மாற மாட்டாள். அவள் என்னிடம் நேரடியாக சொல்லவில்லை, தாய் இருந்திருந்தால் அவளிட்டை சொல்லியிருப்பாள். என்னட்டை என்னெண்டு அவள் நேரில் சொல்லுவாள்? கந்தையன் அவள் சொல்ல யோசிக்கிறதை பற்றி சொன்னான். எனக்கு என்ரை பிள்ளை மீனாட்சியை கணபதிக்கு கட்டி வைக்க நல்ல விருப்பம். நீங்கள் நல்ல நாளை சொன்னால் அன்றைக்கு நாட்சோறு குடும்பம்.” என்றார்.

மீனாட்சி எட்டி எட்டி பார்ப்பதை கண்ட முத்தர்கணபதி நிலமையை புரிந்து கொண்டு, தங்கை மீனாட்சியையும் கந்தையனையும் “வாருங்கள் இன்று வீதியால் நிறைய வண்டில்கள் போகுது. என்னவெண்டு பார்ப்பம்.” என்று சொல்லி முன் வாசலுக்கு கூட்டிச் சென்றான்.

தனித்திருந்த கணபதியும் மீனாட்சியும் மனம் விட்டு கதைத்தனர்.

கணபதி “ஐயாவும் அம்மாவும் உன்னை நான் கலியாணம் செய்வதற்கு சம்மதித்து விட்டார்கள்.” என்று தொடங்கினான்.

அதற்கு மீனாட்சி “விளங்குது. அதாலை தானே பொம்பிளை கேட்டு வந்திருக்கிறார்.” என்று புன்னகையுடன் சொன்னாள். கணபதி அடுத்து என்ன கதைக்கிறது என்று தெரியாது தடுமாறினான். “உங்களை கலியாணம் செய்ய எனக்கு நல்ல சந்தோசம். நீங்கள் பிழையாய் நினைக்காட்டி, உங்களிட்டை இரண்டு விசயம் கதைக்கோணும்.” என்று தயங்கினாள்.

கணபதியும் “நான் உன்னை ஒரு நாளும் பிழையாய் நினைக்க மாட்டன் மீனாட்சி. நீ பயப்படாமல் கேள்.” என்றான். அதற்கு மீனாட்சி “நீங்கள் மச்சம், மாமிசம் சாப்பிடுவீர்கள என்று எனக்கு தெரியும். நான் சைவ சாப்பாடு தான் சாப்பிடுறனான். ஐயா சில நேரம் அந்த சின்ன கொட்டிலுக்கு உள்ளே வைத்து ஏதோ சமைப்பார். கந்தையனும் சாப்பிடுவான். அந்த மணம் எனக்கு பிடிக்காது. உங்கடை வீட்டை வந்த பிறகு என்னை மச்சம் சாப்பிடச் சொல்லி கட்டாயப் படுத்தக் கூடாது. வேணும் எண்டால் உங்களுக்கு நான் சமைத்து தருவன்.” என்று மீண்டும் தயங்கினாள்.

கணபதிக்கு சிரிப்பு வந்தது, “மீனாட்சி, நீ அம்மாவுக்கு ஏற்ற மருமகள் தான். அம்மா எங்களுக்கு சமைத்து தருவா, ஆனால் தான் சாப்பிட மாட்டா. நீ மச்சம் சமைக்க வேண்டாம். நான் நல்லாய் சமைப்பன்.” என்றான்.

கணபதி “மீனாட்சி வேறையும் ஏதோ கதைக்கோணும் என்றாய். அது என்ன?” என்று கேட்டான். “இல்லை, இவன் கந்தையனை இங்கை தனிய விட்டிட்டு வர எனக்கு மனமில்லை. ஐயா வண்டிலைப் பூட்டிக் கொண்டு வெளிக்கிட்டால் சில நேரம் மத்தியானம் சாப்பாட்டுக்கும் வரார். அவன் தனியத்தான் நிக்க வேணும். அது தான் அவனையும் எங்களோடை கூட்டிக்கொண்டு போனால் என்ன?” என்று மீனாட்சி யோசனையோடு கேட்டாள்.

அப்போது கணபதிக்கு, ஆறுமுகத்தார் தாயாரோடு தன்னையும் பத்து வயதில் பெரிய பரந்தனுக்கு கூட்டி வந்தது தான் ஞாபகம் வந்தது.

அதனால் கணபதி “மீனாட்சி, அவனை கூட்டிக் கொண்டு போறதிலை எனக்கும் விருப்பம் தான். ஆனால் அவனது படிப்பு குழம்பி விடுமோ என்று தான் யோசனையாய் இருக்கு.” என்று சொன்னான்.

மீனாட்சி கணபதியை அன்போடு பார்த்து “உங்களை உங்கடை, ஐயா பத்து வயதில் தானே பெரிய பரந்தனுக்கு கூட்டி வந்தவர். அவர் உங்களை நல்ல மனுசனாய் வளர்த்திருக்கிறார். கந்தையனுக்கு இப்ப பன்னிரண்டு வயது ஆகிறது. ஏழாம் வகுப்பு வரை படித்து விட்டான், அது போதும் அவனுக்கு. உங்களைப் பார்த்து அவனும் ஒரு நல்ல மனுசனாய் வரோணும், கமவேலைகளையும் பழக வேணும்.” என்று சொன்னாள்.

“உங்கடை ஐயா சம்மதித்தால் நாங்கள் அவனையும் கூட்டிக் கொண்டு போவம்.” என்று கணபதி சொல்ல மனதில் இருந்த பாரம் குறைந்ததால் அவளது முகம் முழு நிலாவைப் போல மலர்ந்தது.

ஆறுமுகத்தாரும் முருகேசரும் முத்தரும் திரும்பி வந்து திண்ணையில் இருந்தனர்.

அப்போது முத்தர், முருகேசரைப் பார்த்து ” நாங்கள் கதைத்த படி அடுத்த மாதம் வருகின்ற மூன்று நல்ல நாட்களில் ஒரு நாளை மீனாட்சியுடன் கதைத்து எங்களுக்கு அறிவியுங்கோ. நாங்கள் நாட்சோறு குடுக்க ஆயத்தமாய் வருகிறோம், இப்ப நாங்கள் போட்டு வாறம்.” என்று கூறி வெளிக்கிட ஆயத்தமானார்.

அப்போது வீட்டை விட்டு வெளியே வந்த மீனாட்சி, ஆறுமுகத்தாரையும், முத்தரையும் பார்த்து “போட்டு வாருங்கோ மாமா, போட்டு வாருங்கோ முத்தரம்மான்” என்று முறை போட்டு வழியனுப்பி வைத்தாள். கந்தையனும் முத்தர்கணபதியும் தங்கை மீனாட்சியும் புதினம் பார்ப்பதை விட்டு விட்டு ஓடி வந்தனர்.

முத்தர்கணபதி மீனாட்சியைப் பார்த்து “போட்டு வாறம் அக்கா” என்றான். “ஓம், போட்டு வாருங்கோ” என்ற மீனாட்சி, விடை பெற வந்த கணபதியின் தங்கை மீனாட்சியின் கையை பிடித்து அணைத்து தலையை கோதி விட்டு “நீங்களும் போட்டு வாங்கோ குட்டி மச்சாள்” என்றாள்.

பார்த்துக் கொண்டு நின்ற ஆறுமுகத்தாருக்கு மனம் குளிர்ந்து விட்டது. அவர் எல்லோரிடமும் விடை பெற்று வீதியை நோக்கி நடந்தார். கணபதி மீனாட்சியைப் பார்க்க அவள் புன்னகைத்து கண்களாலேயே அவனுக்கு விடை கொடுத்தாள்.

கணபதி வண்டிலில் எருதுகளை பூட்டிக் கொண்டு எல்லோரும் ஏறிய பின் புறப்பட்டான். போகும் வழியில் முத்தர், ஆறுமுகத்தாரைப் பார்த்து “உனக்கு நல்ல மருமகள் தான் வரப்போறாள். நீயும் விசாலாட்சியும் தேடினாலும் இப்படி ஒரு பிள்ளையை கொண்டு வந்திருக்க மாட்டியள்” என்றார்.

ஆறுமுகத்தாரும் மனதிற்குள் ‘மீனாட்சி முறை சொல்லி கதைத்து எல்லாரையும் வசியம் பண்ணி விடுவாள் போல இருக்குது. கொஞ்சம் கறுப்பென்றாலும் இலட்சணமான பிள்ளை. கணபதி அதிகம் கதைக்க மாட்டான். இவள் அவனுக்கும் சேர்த்து கலகலப்பாய் கதைப்பாள் போல இருக்குது’ என்று நினைத்துக் கொண்டார். (காந்தம் ஒன்றின் ஒத்த முனைகள் ஒன்றையொன்று தள்ளும் என்பதும் எதிர்முனைகள் ஒன்றையொன்று கவரும் என்பதும் அந்த நாளில் மக்கள் அறிய மாட்டார்கள்)

பொம்பிளை பார்த்து நாளும் குறித்து வரச்சென்ற எல்லாரும் முகமலர்ச்சியுடன் வருவதைக் கண்ட விசாலாட்சி, அவர்கள் இறங்குவதற்கு முன்னமே “என்ன பொம்பிளையை பார்த்தீங்களா? கணபதிக்கு பொருத்தமாயிருக்கிறாளா? என்று துருவி துருவி கேட்டாள். அதற்கு ஆறுமுகத்தார் “எங்கடை குடும்பத்திற்கு பொருத்தமான நல்ல பிள்ளை.” என்றார்.

ஆறே வயதான மீனாட்சி “என்ரை மச்சாள், என்ரை மச்சாள்” என்று கத்திக் கொண்டு நித்திரையாய் இருந்த பேரம்பலத்திடம் ஓடினாள்.

பரந்தனிலிருந்து நேராக பெரிய பரந்தன் எல்லை, செருக்கன் எல்லை வழியாக, காட்டினூடாக சென்று குடமுருட்டி ஆற்றினருகே சென்று பின் திரும்பி நேராக சாமிப்புலம், நல்லூர் வழியாக பூனகரி சென்ற வண்டில் பாதையை தான் பெரிய பரந்தன் மக்கள் பயன்படுத்தினர்.

கரடிப்போக்கிலிருந்து நேராக பெரிய பரந்தன் காடு வழியாக பெரியபரந்தனையும் குஞ்சுப் பரந்தனையும் ஊடறுத்து செருக்கனின் முன் புறமாக சென்று குடமுருட்டியில் பழைய பாதையுடன் இணைந்த வண்டில் பாதையும் உருவாகியது. இரண்டு பாதைகளும் நீலன் ஆற்றையும் கொல்லன் ஆற்றையும் கடந்து தான் போக வேண்டும்.

ஆங்கில அரசாங்கம் இரண்டு ஆறுகளுக்கும் இவ்விரண்டு பாலங்களை அமைதப்பதற்கு பொறியியலாளர்களை அனுப்ப, அவர்கள் அளவீடுகளை செய்து கற்களையும் பதித்தனர்.  பின்னர் சிக்கனம் கருதி பரந்தனிலிருந்து பெரியபரந்தன் காட்டினூடாக குறுக்கே ஒரு புதிய பாதையை அமைத்து, கரடிப்போக்கிலிருந்து வந்த பாதையுடன் இணைத்து (இணைத்த இடம் இப்போது ஓவசியர்சந்தி என்று அழைக்கப்படுகிறது) புதிய பாதையை உருவாக்கினார்கள். அந்த புதிய பாதையை கிரவல் போட்டு சீராக்கினார்கள். புதிய பாதைக்கு இரண்டு பாலங்களையும் கட்டினார்கள்.

கல்வயலைச் சேர்ந்த ஒருவருக்கு பெரிய பரந்தனில் புதிய பாதையின் அருகில் ஒரு காணி இருந்தது. அவர் அதனை விற்று விட்டு ஊரோடு போக விரும்பினார். ஆறுமுகத்தார் அந்த காணியை வாங்கி கணபதியின் பெயரில் எழுத விரும்பினார்.

“விசாலாட்சி, கணபதி பத்து வயதில் என்னுடைய கையை பிடித்துக் கொண்டு வந்து, உழைக்க தொடங்கினவன், இன்று வரை தனக்கென்று எதையும் எதிர்பாராது உழைக்கிறான். நாங்கள் அந்த காணியை அவன் பெயரில் வாங்குவோம்.” என்று விசாலாட்சியிடம் கேட்டார்.

விசாலாட்சியும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தாள். கணபதியின் பெயரில் காணி வாங்கி எழுதப்பட்டது.

.

தொடரும்..

.

.

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

.

ஓவியம் : இந்து பரா – கனடா

.

முன்னையபகுதிகள்:

பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/

பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/

பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/

பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/

பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/

பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/

பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/

பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/

பகுதி 12  – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/

பகுதி 13  – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/

பகுதி 14  – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/

பகுதி 15  – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/

பகுதி 16  – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/

பகுதி 17  – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/

பகுதி 18  – https://vanakkamlondon.com/stories/special-topics/2021/01/97412/

பகுதி 19  – https://vanakkamlondon.com/stories/2021/01/98425/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More