கன்னிவாடியில் பயிற்சி டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பொதுமக்களின் நலன்கருதி மருத்துவமனை வளாகத்தில் மரத்தடியில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கன்னிவாடியில் 30 படுக்கைகளுடன் அரசு மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு 6 டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, இங்கு பணியாற்றிய பயிற்சி டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து பிற டாக்டர்கள், நர்சுகள் உள்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதேநேரம் மருத்துவமனையும் மூடப்பட்டது. இதனால் கன்னிவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள், மருத்துவ வசதிக்கு சிரமப்படும் சூழல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பொதுமக்களின் நலன்கருதி மருத்துவமனை வளாகத்தில் மரத்தடியில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக மரத்தின் நிழலில் டாக்டர்கள் அமர்ந்து, நோயாளிகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த மருத்துவமனைக்கு தினமும் 300-க்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சைக்காக வருவது வழக்கம். ஆனால், கொரோனாவால் பயிற்சி டாக்டர் பாதிக்கப்பட்டதை அறிந்த பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துவிட்டது.