இந்திய நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடருக்கு முன்பாக வழக்கமாக நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டம் இந்தமுறை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் எதிர்வரும் 14ம் திகதி ஆரம்பமாகி வார விடுமுறையின்றி, ஒக்டோபர் 1ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. மேலும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் இரு அவைகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் சூழலைக் கருத்திற்கொண்டு நாடாளுமன்றக் கூட்டம் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும் பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெறவுள்ளதுடன், கூட்டத் தொடரில் கேள்வி நேரம் மற்றும் தனிநபர் சட்டமூலம் ஆகியன இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கேள்வி நேரத்துக்குப் பின்னரான நேரமும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும் என்று மக்களவை, மாநிலங்களவைச் செயலாளர்கள் அறிவித்துள்ளனர்.
குறித்த தீர்மானங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், கேள்வி நேரத்தை இரத்து செய்வது ஜனநாயகத்திற்கும் அரசியல் சட்டத்திற்கும் எதிரானது என கூறி வருகின்றன.
இந்த நிலையில் நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடருக்கு முன்பாக வழக்கமாக நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டம் இந்தமுறை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக அலுவல் ஆய்வுக்குழு மட்டும் இன்று கூடி, அவை நடவடிக்கைகள் தொடர்பாக முடிவெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.