மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அண்மையில் சீனாவுடனான உறவுநிலை பழைய பாதைக்கு திரும்புவது கடினம் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், ஹுவா சுனியிங் மேற்படி கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “இந்தியாவும், சீனாவும் அண்டை நாடுகள் மட்டுமின்றி உலகின் மிகப்பெரிய 2 வளர்ந்து வரும் சந்தைகளாகும்.
இரு நாடுகளும் நல்ல உறவுகளை பேணுவது இருநாடுகளின் அடிப்படை நலன்களுக்கும், அதன் மக்களுக்கும் நல்லது. ஆனால் இந்த உறவுகளுக்கு இரு தரப்பிலிருந்தும் பொதுவான முயற்சிகள் தேவை.
எல்லைப்பகுதி நிலைமை மிகவும் தெளிவாக உள்ளது. அதாவது இதன் மொத்த பொறுப்பும் இந்தியாவை சார்ந்தது. இரு நாடுகளுக்கு இடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களை சீனா கடுமையாக பின்பற்றுகிறது. மேலும் எல்லை பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது.
எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பேணவும், பிராந்தியத்தில் அமைதியை கட்டமைக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அதேநேரம் எங்கள் பிராந்திய இறையாண்மையை பாதுகாக்கவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
எனவே இந்திய தரப்பில் அது எதை பிரதிபலிக்க வேண்டும்? என்பது ஒரு தீவிரமான கேள்வியாக இருப்பதாக நான் நினைக்கிறேன். இரு தரப்பு உறவுகளில் சவால்கள் இருக்கலாம். ஆனால் இந்தியா விவகாரத்தில் சீனாவின் கொள்கையும், நிலைப்பாடும் அப்படியே இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.