திருவள்ளுவர் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஆண்டுதோறும் தை மாதத்தின் இரண்டாவது நாளான மாட்டுப் பொங்கல் அன்று தெய்வப் புலவர் திருவள்ளுவரின் நாளாக பூசிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று(வெள்ளிக்கிழமை) திருவள்ளுவர் நாள் கொண்டாடப்பட்டது.
இதன்படி, பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் திருவள்ளுவரின் பெருமைகளையும், சிறப்புகளையும் எடுத்துரைத்து வருகின்றனர்.
அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடியும் திருவள்ளுவர் தினத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தமிழில் வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில்,
“திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு தலை வணங்குகிறேன். திருவள்ளுவரின் சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிக்கின்றன.
அவரது இலட்சியங்கள் தலைமுறைகளைக் கடந்து மக்களிடம் ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று மோடி தெரிவித்துள்ளார்.