குஜராத்தில் நடைபெறும் இராணுவ அதிகாரிகள் மாநாட்டின் இறுதி நாளான இன்று (சனிக்கிழமை), பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றவுள்ளார்.
இதற்காக பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து தனி விமானம் ஊடாக குஜராத் மாநிலம்- ஆமதாபாத் விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இதன்போது பிரதமர் மோடியை, ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், முதல்வர் விஜய் ரூபானி மற்றும் துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோர் வரவேற்றனர்.
லடாக்கில் சீனாவுடன் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் இந்த உயர் அதிகாரிகளின் மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த மாநாட்டில் அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைவர் பிபின் ராவத், இராணுவ தளபதி நரவனே, விமானப்படை தளபதி பதாரியா, கடற்படை தளபதி கரம்பிர் சிங் மற்றும் இராணுவ அமைச்சக மூத்த அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.
குஜராத் மாநிலம்- நர்மதா மாவட்டத்திலுள்ள கெவாடியா நகரில், இராணுவ அதிகாரிகள் மாநாடு கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தேசியப் பாதுகாப்பு, எல்லைப் பிரச்சினைகள், அண்டை நாடுகளுடனான இராணுவ உறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.