இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளார்.
காணொளி தொடர்பாடல் மூலம் இன்று (புதன்கிழமை) இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்போது, கொரோனா தடுப்பூசி மாநிலங்களில் எந்தளவுக்கு செலுத்தப்பட்டு வருகிறது மற்றும் தடுப்பூசிச் செயன்முறையை விரைவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இந்தியாவில் கடந்த டிசம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்து இதுவரை கொரோனா பாதிப்பு 33 வீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, நாட்டின் மொத்த வைரஸ் பாதிப்பில் 85 வீதம் மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா உட்பட 8 மாநிலங்களில் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா பரவல் அதிகரிப்பால் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டில் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும்படி மக்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.