சென்னை: ‘இந்திய மீன்வள வரைவு மசோதா’வை நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்து, நிறைவேற்ற முனைந்திருக்கின்றது ஒன்றிய அரசு. இந்நிலையில் இந்திய கடல்சார் மீன்வள மசோதா தாக்கல் செய்ய வேண்டாம் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில்; இந்திய கடல்சார் மீன்வள மசோதா தாக்கல் செய்ய வேண்டாம். கடல்சார் மீன்வள மசோதா இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்; இந்திய கடல்சார் மீன்வள மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம்.
ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்டுள்ள மசோதாவில் உள்ள சில பிரிவுகளில், மீனவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்துதல் (Criminalisation), சிறையில் அடைத்தல், மீனவர்களுக்கு எதிராக வலிய நடவடிக்கைகளை எடுத்தல் (Use of force), கட்டணங்களை விதிப்பது, பெரும் அபராதங்களை விதிப்பது போன்ற மீனவர்களுக்கு எதிரான உட்பிரிவுகள் இருப்பதால், இது பரவலாக எதிர்ப்புகளையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களுக்கான உரிமைகளை பாதிக்கும் உட்பிரிவுகள் மசோதாவில் உள்ளன. அனைத்து தரப்பு மக்களுடன் ஆலோசனை நடத்தியபிறகு புதிய மசோதாவை தாக்கல் செய்யலாம்.
இந்திய கடல்சார் மீன்வள மசோதா 2021-ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முயற்சியினை தொடர வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம்
இந்தியாவில் கடல் வளம் மிகுந்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. நாட்டின் மொத்த கடற்கரைப் பரப்பில் 13 சதவீதம், அதாவது 1076 கி.மீ நீளம் தமிழகத்தில்தான் உள்ளது. சுமார், 40 ஆயிரம் பாரம்பரிய படகுகள், 6 ஆயிரம் விசைப்படகுகளுடன் கடல் வளத்தை நம்பி உள்ள மீனவர்கள் எண்ணிக்கையோ 10 லட்சத்துக்கும் அதிகம்.