புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா சென்னையில் மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணி-முதல்வர் நேரில் ஆய்வு!

சென்னையில் மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணி-முதல்வர் நேரில் ஆய்வு!

3 minutes read

சென்னை: மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் 2ம் கட்டப்பணிகள், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் ரூ.389.42 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பபட்டு வரும் சென்ட்ரல் சதுக்க திட்டப்பணிகள் மற்றும் கத்திப்பாரா நகர்ப்புற சதுக்க பகுதியில் ரூ.14.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு மேம்பாட்டு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார். சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலை குறைத்திடவும், மக்களின் பயண நேரத்தை குறைத்து பயணத்தை எளிமையாகவும், அதிநவீன வசதியாக அமைத்திடவும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கலைஞர் தலைமையிலான அரசால் 2007ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி, முதல்கட்ட திட்டத்தின் கட்டுமான பணிகளை அப்போதைய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2009ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைக்கப்பட்டு, தற்போது சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான வழித்தடம் (45.8 கி.மீ), கலங்கரைவிளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச் சாலை வரையிலான வழித்தடம் (26.1 கி.மீ) மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடம் (47.0 கி.மீ) என மொத்தம் 118.9 கி.மீ நீளத்திலான 3 வழித்தடங்களை ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னையில், மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்ட பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்படி, நேற்று காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் நிதியுதவியுடன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் ரூ.389.42 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய சதுக்க திட்ட பணிகளை (சென்ட்ரல் சதுக்கம்) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இத்திட்டத்தின் கீழ் வெளியூர் ரயில், புறநகர் ரயில், பறக்கும் ரயில், மெட்ரோ ரயில், மாநகர போக்குவரத்து மற்றும் இதர பொது போக்குவரத்துகளை ஒருங்கிணைத்தல், பூந்தமல்லி நெடுஞ்சாலையின் குறுக்கே 2 சுரங்க நடைபாதைகள், நிலத்தடி வாகன நிறுத்தங்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான கட்டிடம், அருகில் உள்ள ரிப்பன் மாளிகை, விக்டோரியா பொதுக்கூடம், சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றிற்கு இடையே உள்ள பகுதியை உலகத்தரத்திற்கு இணையாக மேம்படுத்தும் பணிகள் குறித்த விவரங்களை அதிகாரிகள் முதல்வர் கேட்டறிந்தார். மத்திய சதுக்கத்தினை சிங்காரச் சென்னையின் மணிமகுடமாக விளங்கும் வகையில், நேர்த்தியாக பணிகளை குறித்த காலத்தில் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, கத்திப்பாரா நகர்ப்புற சதுக்க பகுதிக்கு சென்று, கத்திப்பாரா மேம்பாலத்தின் அடியில் உள்ள குளோவர் பகுதிகளில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் பன்முக போக்குவரத்துகளை ஒருங்கிணைத்து, பயணிகள் ஒரு போக்குவரத்தில் இருந்து மற்றொரு போக்குவரத்திற்கு மாறிச் செல்வதற்கும், அப்பகுதியில் காத்திருக்கும்போது பயணிகளுக்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கும் ரூ.14.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு மேம்பாட்டு பணிகளை முதல்வர் பார்வையிட்டார். அந்த பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும்படி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் போரூர், ராமச்சந்திரா மருந்துவமனை எதிரில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் தெள்ளியகரம் மெட்ரோ நிலையத்தின் கட்டுமான பணிகளையும், அங்கு அமைக்கப்பட்டு வரும் உயர்த்தப்பட்ட மெட்ரோ நிலைய கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, மவுண்ட் – பூந்தமல்லி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், கட்டுமான பணிகளின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின்போது, சிறப்பு முயற்சிகள் துறையின் முதன்மை செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) / சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பிரதீப் யாதவ், இயக்குநர்கள் அர்ச்சுனன் (திட்டங்கள்), ராஜேஷ் சதுர்வேதி (இயக்கம் மற்றும் பராமரிப்பு) மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உடன் இருந்தார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More