புதுடெல்லி:
பிரதமர் மோடியின் அதிரடி நடவடிக்கையால் இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற மக்களவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த விவாதத்தின் போது பதில் அளித்து பேசிய மன்சுக் மாண்டவியா, மோசமான நிலையில் இருந்த சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளை பிரதமர் மோடி வலுப்படுத்தியதாக கூறினார். இதற்காக முந்தைய அரசுகளை குறை கூறுவதை கைவிட்டு கொரோனா பரவலை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையை மட்டும் எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் ஒரு தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருவதற்கு மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பின்னரே ஒப்புதல் வழங்கப்படும் எனறும், அதனால் அந்த தடுப்பூசியால் உரிய நேரத்தில் பலன் கிடைப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் அந்த விதிகளை திருத்தி ஒரே ஆண்டிற்குள் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வர மோடி அரசு எடுத்த நடவடிக்கையே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2 வருடமாக பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் எடுக்கப்பட்ட முடிவுகள், இந்த அரசு அதிகாரத்துடன் செயல்படவில்லை மன உறுதியுடன் செயல்படுவதை காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.
கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 13 ஆம்தேதி கேரளாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவுடன் மத்திய அரசு விழிப்புணர்வுடன் செயல்பட்டதாகவும் உடனடியாக ஒரு குழு உருவாக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை தொடங்கியதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டார்.