சென்னை: சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 136 படுக்கை வசதியுடன் கூடிய ஒமிக்ரான் வார்டை திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார். சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக தனிவார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவ கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியிருந்தார். ஏற்கனவே போடப்பட்ட படுக்கைகள், மருந்துகள், ஆக்சிஜன் கையிருப்புகளை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் ஆக்சிஜன் வசதியை பொறுத்தவரை 1,400 டன் அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1¼ லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் சிகிச்சை அளிப்பதற்காக தனியாக வார்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. ஏற்கனவே கொரோனா சிகிச்சைக்கு என ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுன் 1,522 படுக்கைகளும், தீவிர சிகிச்சை பிரிவில் 550 படுக்கைகளும் என மொத்தமாக 2,050 படுக்கைகள் செயல்பாட்டில் உள்ளது. இதையடுத்து தற்போது ஒமிக்ரான் சிகிச்சை அளிப்பதற்காக தனிவார்டு அமைக்கும்படி அறிவுறுத்தியிருந்த நிலையில் அதற்காக 136 படுக்கை வசதியுடன் கூடிய ஒமிக்ரான் வார்டு அமைக்கப்பட்டு ஆக்சிஜன் பொருத்தும் பணி நடைபெற்றது.
இதையடுத்து இன்று காலை 11 மணியளவில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஒமிக்ரான் வார்டு, ஆக்சிஜன் இருப்பு, மருத்துவ கட்டமைப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து ஒமிக்ரான் சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்டுள்ள 136 படுக்கைகள் கொண்ட தனிவார்டையும் பார்வையிட்டு திறந்து வைத்தார். அப்போது அவருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன், டீன் டாக்டர் தேரணிராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.