இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையேயான கடல் வழி மின் தடம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதற்கு வசதியாக தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடலுக்கடியில் மின் பாதை அமைக்கும் திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வௌியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டொக்டர் எஸ்.ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மதுரையிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக மின் பாதை அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பினால் கைவிடப்பட்டதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மின் பாதை அமைக்கும் திட்டம் தொடர்பில் மீண்டும் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக இலங்கை மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முயற்சி பொதுவாக இந்திய நலனுக்கும் குறிப்பாக தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பாதகமாக அமையும் என்பதே உண்மை என டொக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.
சேது சமுத்திர திட்டம் தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கான கனவுத் திட்டம் என தெரிவித்துள்ள அவர், இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையேயான மின் பாதை அமைக்கப்பட்டால் அந்த திட்டத்தை கைவிட நேரிடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.