செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வெறும் 7 சதவீத கடன் தள்ளுபடிக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளமை நற்செய்தியல்ல – ஹர்ஷ டி சில்வா

வெறும் 7 சதவீத கடன் தள்ளுபடிக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளமை நற்செய்தியல்ல – ஹர்ஷ டி சில்வா

2 minutes read

சர்வதேச கடன் வழங்குனர்களுடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கமைய 7 சதவீத கடன் தள்ளுபடி மாத்திரமே கிடைக்கப்பெறவுள்ளது. 28 சதவீத கடன் தள்ளுபடி எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 7 சதவீதத்துக்கு மாத்திரம் இணக்கம் காணப்பட்டுள்ளமை ஒரு நற்செய்தியல்ல என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பிரதான இரு தரப்பு உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களான சீன, ஜப்பன் இந்தியா உட்பட ஏனைய நாடுகளுடன் இணக்கப்பாட்டை எட்டியமை உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. அதன் ஊடாக நன்மை கிடைக்குமானால் இலங்கை என்ற குழந்தையை அங்குமிங்கும் இழுத்து சிதைப்பதற்கு நாம் தயாராக இல்லை என்நும் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.

வியாழக்கிழமை (27) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரை தொடர்பில்கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய விசேட உரையை செவிமடுத்தோம். அதில் நாட்டுக்கு சிறந்த தாய் யார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் நாணய நிதியத்தை நாட வேண்டும் என்று வலியுறுத்தியவர்கள் தற்போது அதனை எதிர்க்கின்றனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி எல்லா விடயங்களுக்கும் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. ஜனாதிபதிக்கு இந்த உரையை எழுதிக் கொடுத்தவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தாலும், அதனை வாசிக்க முன்னர் ஜனாதிபதி சற்று சிந்தித்திருக்கலாம். சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு நாமே ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தி வந்தோம்.

ஐக்கிய மக்கள் சக்தி அசடு போல் தான் இதுவரை செயற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். நாம் எவ்வாறு செயற்பட்டோம் என்பதை ஜனாதிபதி ஒருமுறை சிந்தித்து பார்த்திருக்க வேண்டும். 2020இல் பாராளுமன்றத்துக்கு வந்த முதல் நாளே நாணய நிதியத்தை நாட வேண்டும் என்று நாம் கூறினோம். இதனைப் புரிந்து கொள்ளுங்கள். சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டமைக்கெதிராக நாம் எமது வாக்கினைப் பயன்படுத்தவில்லை.

ஜனாதிபதியின் உரையை தயாரித்தவர் அதனை அறிந்திருக்கவில்லை போலும். நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டில் சில திருத்தங்களை மேற்கொள்வோம் என்றே நாம் கூறினோம். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பீட்டர் பீருவருடனான கலந்துரையாடலிலும் எவ்வாறு நாம் இதில் திருத்தங்களை ஏற்படுத்துவோம் என்பதை தெளிவாக தெரிவித்துள்ளோம்.

பிரதான இரு தரப்பு உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களான சீன, ஜப்பன் இந்தியா உட்பட ஏனைய நாடுகளுடன் இணக்கப்பாட்டை எட்டியமை உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. அதன் ஊடாக நன்மை கிடைக்குமானால் இலங்கை என்ற குழந்தையை அங்குமிங்கும் இழுத்து சிதைப்பதற்கு நாம் தயாராக இல்லை.  நாம் மக்களுக்கான எதிர்க்கட்சியாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இது எமது இராஜதந்திர உறவுகளினால் கிடைத்த பலன் ஒன்றாகும். மாறாக லஸாட் மற்றும் கிளிபோர் சான்ஸ் நிறுவனங்களின் தலையீட்டினால் கிடைத்த ஒன்றல்ல.

தற்போது ஜப்பானுடன் இணக்கப்பாட்டை எட்டியதற்கு கரகோஷமெழுப்பியவர்களே, அன்று ஜப்பானை கன்னங்களில் அறைந்து நாட்டை விட்டு விரட்டினர். இந்தியாவுடன் எமக்கு பெரும் சகோதரத்துவ பிணைப்புள்ளது. ஜப்பான் எமது நீண்ட நட்பு நாடாகும். நாடுகளோடு நாம் பேணி வந்த நட்புகளாலயே இந்த வெற்றி எமக்கு கிடைத்தது. இவ்வாறு இணக்கப்பாடு எட்டப்பட்ட விடயங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும், அதற்கு ஆதரவு வழங்குமாறும் ஜனாதிபதி கோரியுள்ளனர்.

அதன் உள்ளடக்கம் குறித்து அறிய வேண்டியுள்ளது. எத்தனை வருடங்களுக்கு சலுகைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது? 2028 வரை கடன் தவணைகளை செலுத்த வேண்டிய தேவை இல்லை என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். கடன் தவணைகளை காலம் தாழ்த்தும் போது வட்டி செலுத்த வேண்டுமா? இல்லையா? அதன் பிற்பாடு வட்டி விகிதம் என்ன? இது தொடர்பான விடயங்களை அறிய விரும்புகிறோம். சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்கள் அடங்களாக சர்வதேச வணிக்கடன் தரப்பினரோடு இதுவரை எந்த நிலையான இணக்கப்பாடுகளையும் எட்டவில்லை.

சர்வதேச வணிக கடன் தாரர்கள் தற்போது முன்வைத்துள்ள விடயங்களுடன் இலங்கை இணக்கப்பாட்டை எட்டுமாக இருந்தால் இதற்கு நாம் எமது எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.  காரணம் அவர்கள் முன்வைத்துள்ள விடயங்கள் நாட்டுக்கு பாதகமானவையாகும். கடன் செலுத்தும் இயலுமையையே பார்க்கின்றனர். நிதி ஸ்திரதன்மையை மீட்டெடுக்கும் நிலை இங்கு அவதானிக்கப்படுகிறது. இதனால் புதிய தரப்படுத்தல் நிலையை எட்டலாம். சர்வதேச நாணய நிதியம் புதிதாக முன்வைத்துள்ள இணக்கப்பாட்டறிக்கையில் கடன்மீள் செலுத்தாமை சலுகை வீதம் என்ன என்பது குறிப்பிடப்படவில்லை.

இந்த இணக்கப்பாட்டுக்கமைய கடன் தள்ளுபடி 50 வீதம் என ஆரம்பத்தில் அரசாங்கம் தெரிவித்தது. பின்னர் 30 சதவீதம் எனத் தெரிவிக்கப்பட்டது. இறுதியில் 28 சதவீதமென எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. எவ்வாறிருந்தாலும் இது 2028ஆம் ஆண்டிலிருந்தே நடைமுறைக்கு வரும்.  சர்வதேச நாணய நிதியம் புதிதாக முன்வைத்துள்ள இணக்கப்பாட்டறிக்கையின் பிரகாரம் அவதானிக்குமிடத்து கடன் தள்ளுபடி 28 சதவீதத்திலிருந்து – 7 சதவீதம் வரை குறைவடைந்துள்ளது.

இந்தளவு குறைந்த மட்டத்துக்கு உடன்பாட்டை எட்டியமை நாட்டிக்கு நற்செய்தியல்ல. மக்களுக்கு பாதமே. இதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள  பரிசீலனை பரிந்துரைகளின் பிரகாரம் முன்னோக்கி செல்லும் தீர்மானத்துக்கு வந்தால் இது குறித்து கலந்துரையாடலாம் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More